பிரபல வங்கதேச ஹோட்டலில் கொடூர விபத்து.. 43 பேர் பலி, பலர் படுகாயம்

டாக்கா: வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். பலர் மோசமாக காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்றிரவு அங்குள்ள பிரபல ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டாக்காவின் வெளியே உள்ள ஏழு மாடிக் கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டலில் மாடியில் ஏற்பட்ட இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

அதிகாரிகள்: இது குறித்துத் தீயணைப்புத் துறையினர் கூறுகையில், “டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் இரவு 9:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மிக விரைவாக மற்ற இடங்களில் பரவியது. இதில் உள்ள ஏராளமான மக்களும் சிக்கிக்கொண்டனர். ஹோட்டலில் இருந்த 75 பேரை உயிருடன் மீட்டுள்ளோம்” என்றார். பெய்லி சாலையில் பல முக்கிய கட்டிடங்கள் இருக்கும் நிலையில், அங்கே தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள் இது தொடர்பாகக் கூறுகையில், “நாங்கள் 6ஆவது மாடியில் இருந்தபோது முதலில் படிக்கட்டு வழியாகப் புகை வருவதைக் கண்டோம். அங்கிருந்து தண்ணீர் குழாய் வழியாக கீழே இறங்கினோம். இருப்பினும், அச்சத்தில் சிலர் குதித்த நிலையில், அவர்கள் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் மாடியில் இருந்தவாறே உதவிக்கு அழைத்தனர். மேலே பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்தனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகே தீ கட்டுக்குள் வந்தது” என்றார்.

என்ன காரணம்: வங்கதேசத்தைப் பொறுத்தவரை அங்கே முக்கிய பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களில் கூட முறையான விதிகள் கடைப்பிடிக்கப்படாது. இதனால் அங்கே அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இப்படி தான் கடந்த 2021 ஜூலை மாதம் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 52 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல கடந்த காலங்களில் அங்கே பல மோசமான தீ விபத்துகள் அரங்கேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here