காணாமல்போன MH370 விமானத்தை தேடும்பணி தொடரும் என்கிறார் லோக்

கோலாலம்பூர்:

காணாமற்போன MH370 மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தைத் தேடும் பணிகள் இயன்றவரை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

இது, மலேசிய அரசாங்கத்தின் கடமை என்றும், தேடல் தொடரும் என்பதற்கான வாக்குறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உங்களின் முன்னால் நிற்கும் இவ்வேளையில் வாக்குறுதி அளிக்கிறேன். தேடல் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு ஓ‌ஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நோக்கில் ஆதாரத்தைச் சேகரிக்கத் தேவையான அனைத்தையும் செய்வேன்,” என்று லோக் கூறினார்.

MH370 காணாமற்போன 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு சொன்னார்.

புதிய தகவல்களும் நம்பகமான ஆதாரமும் கிடைத்து அவை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் தேடல் பணிகளைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கப்படும்; இதுவே மலேசிய அரசாங்கத்தின் ஒருமித்த நிலைப்பாடு என்று லோக் விளக்கினார்.

இதன் தொடர்பில் ஓ‌ஷன் இன்ஃபினிட்டியை மலேசியாவுக்கு அழைக்குமாறு போக்குவரத்து அமைச்சுக்குத் தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஓ‌ஷன் இன்ஃபினிட்டி இதற்கென உகந்த நாள்களை ஒதுக்குவதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களைச் சந்திக்க எண்ணம் கொண்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

MH370 விமானத்தில் இருந்தோரின் குடும்பத்தாரும் நண்பர்களும் தொடர்ந்து மனபலத்துடன் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் லோக் சொன்னார்.

“உங்களுக்கு எங்களின் அனுதாபங்கள் இருக்கின்றன. நீங்கள் என்றுமே எங்களின் நினைவிலும் பிரார்த்தனையிலும் இருப்பீர்கள்.

“முக்கியமாக, நாங்கள் எள்றுமே உங்களுடன் நிற்போம்,” என்றார் லோக்.

ஓ‌ஷன் இன்ஃபினிட்டியுடனான பழைய ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

போயிங் 777 ரக விமானமான MH370, 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றுகொண்டிருந்தபோது ரேடாரிலிருந்து காணாமற்போனது. அதில் 239 பேர் இருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here