மதுவை ஒதுக்கிவிட்டு மங்கையர் பக்கம் போங்க.. ரஷ்ய இளைஞர்களுக்கு புதின் ஆலோசனை

மாஸ்கோ: ரஷ்யா இப்போது ரொம்பவே வினோதமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில், இதில் இருந்து தப்ப மக்கள் உதவ வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய புதின், தனது மக்கள் பெரிய குடும்பங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அதுவே நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆயுளை நீட்டிக்க ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் அவர் வலியுறுத்தினார். நாட்டு மக்களிடையே பேசிய புதின் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.

புதின்: உக்ரைனுக்கு அதிக ஆதரவை வழங்கினால் அது மோசமான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும் என்று புதின் நேட்டோ நாடுகளை எச்சரித்தார். தனது நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்கள் குறித்து விளக்கிய அவர், மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனின் உதவிக்கு வந்தால் அவர்களும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். வெளிநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி சொந்த நாட்டுப் பிரச்சினைகள் குறித்தும் புதின் விரிவாகப் பேசினார்.

ரஷ்யர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையைத் தரத் தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், அப்படியே ரஷ்யா இப்போது எதிர்கொண்டு வரும் மக்கள் தொகை சிக்கல் குறித்தும் பேசினார். ரஷ்யாவில் மக்கள் தொகை குறைவது பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில். ரஷ்ய மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

பெரிய பிரச்சினை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எந்தவொரு குடும்பத்தின் முக்கிய நோக்கமும் குழந்தைகளைப் பெறுவதும்.. குழந்தைகளை வளர்ப்பதும் தான். இவை தான் நமது நாட்டை பல இனங்களைக் கொண்ட வலிமையான தேசமாக மாற்றும்.. ஆனால், உலகின் சில நாடுகளில் என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.. குடும்பம் முறை வேண்டுமென்றே அழிக்கப்படுகிறது. இதனால் மக்கள் தொகை சரிகிறது. இதனால் அழிவை நோக்கி சில நாடுகள் சென்று கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.

மனிதர்களாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாம் நமது வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். மனித நாகரிகத்தின் கோட்டையாக ரஷ்யா இருந்து வருகிறது. குழந்தைகள் தான் நமது குடும்ப முறையின் அடிப்படை. இங்கு எல்லா குடும்பங்களும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பமாக இருக்க வேண்டும். அது அடிப்படை விதியாக இருந்தால் மட்டுமே பல இனங்களைக் கொண்ட வலுவான ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

மக்கள் தொகை சிக்கல்: தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கப் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்குப் பணம் வழங்குகிறோம். பெற்றோரின் இரண்டாவது குழந்தை மற்றும் ஒவ்வொரு அடுத்தடுத்த குழந்தைக்கும் வரி விலக்குகள் இரட்டிப்பாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளைப் பெற்று வளர்க்க நல்ல ஆரோக்கியம் வேண்டும். அந்த ஆரோக்கியத்திற்கு ரஷ்ய இளைஞர்கள் அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வில் வெல்லும் மக்களுக்கு அடுத்தாண்டு முதல் வரி விலக்குகளும் அளிக்கப்படும். குடிப்பதை நிறுத்திவிட்டு விளையாட போங்கள் என்று நமது நாட்டில் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இப்போது அதை மாற்றி.. குடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

குடிப் பழக்கம்: குடிப்பழக்கத்தைக் குறைக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதனால் நல்ல முடிவும் கிடைக்கிறது. உண்மையில், எந்தவொரு தீவிரமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல், மது பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்துள்ளோம், இது நிச்சயமாகத் தேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here