ஆஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற கணவர்! இந்தியா வந்து குழந்தையை மாமியாரிடம் விட்டுவிட்டு தலைமறைவு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 36 வயது பெண் ஒருவரை அவரது கணவரே படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படிப்பு மட்டுமின்றி வேலை கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் செல்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. ஐடி துறையில் இந்தியர்களுக்கு அதிக தேவை இருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர் கொலை: ஆஸ்திரேலியாவிலும் அப்படி தான் கணிசமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அப்படி தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இந்த பெண்ணை அவரது கணவரே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மனைவியைக் கொன்ற பிறகு அந்த நபர் தனது குழந்தையுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட அந்த பெண் சைதன்யா மதகனி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அங்கே வசித்து வந்தார். இந்தச் சூழலில் தான் அந்த பெண்ணின் உடல் கடந்த சனிக்கிழமை பக்லி என்ற பகுதியில் ஒரு சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு தொட்டியில் கண்டறியப்பட்டுள்ளது. மனைவியைக் கொன்றுவிட்டதால் தன்னை கைது செய்துவிடுவார்கள் பிறகு குழந்தை எதிர்காலம் பாழாகிவிடும் என அவரது கணவர் நினைத்துள்ளார்.

கணவர் செய்த செயல்: இதனால் உடனடியாக இந்தியாவுக்கு டிக்கெட் எடுத்த அந்த கணவர், குழந்தையையும் அழைத்துக் கொண்டு இந்தியா வந்துவிட்டராம். இதை ஆஸ்திரேலியா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்தியா வந்த அந்த நபர் கொலை செய்த தனது மனைவியின் பெற்றோரை நேரில் சந்தித்துள்ளார். மேலும், குழந்தையை அவர்கள் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த அந்த பெண் தெலுங்கானாவின் உப்பல் பகுதியைச் சேர்ந்தவராம். இதையடுத்து உப்பல் எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி உயிரிழந்த அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாகப் பண்டாரி லக்ஷ்மா ரெட்டி கூறுகையில், அந்தப் பெண்ணின் பெற்றோரின் வேண்டுகோளின் பேரில், அந்தப் பெண்ணின் உடலை ஹைதராபாத்துக்குக் கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திற்கு எழுதியுள்ளேன். இது குறித்து தெலுங்கானாவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளேன். மகளைக் கொன்றதை மருமகன் ஒப்புக்கொண்டதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.. அந்த நபரைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here