KLIAயிலிருந்து புறப்படும் எல்லாப் பயணிகளும் ஜூன் 1 முதல் 73 ரிங்கிட் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்

கோலாலம்பூர்:

மலேசியாவின் விமான நிலையங்கள் வாயிலாக பயணம் செய்வோர் ஜூன் 1 முதல் அதிக சேவைக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (Mavcom) தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும் மலேசிய விமான நிலையங்களை நடத்தும் MAHB யின் பங்குவிலை புதன்கிழமை 8.69 ரிங்கிட்டுக்கு உயர்ந்து, 52 வார உச்சத்தைத் தொட்டது.

ஆயினும், கட்டண அதிகரிப்பு குறித்து சமூக ஊடகங்களில் பயணிகள் எரிச்சலை வெளிப்படுத்தியதோடு கட்டண உயர்வுக்கான காரணங்களை விளக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.

சேவைக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இது ஜூன் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் எல்லாப் பயணிகளும் ஜூன் 1 முதல் 73 ரிங்கிட் செலுத்த வேண்டும்.

தற்போது, கோலாலம்பூரில் இருந்து ஆசியான் நாடுகளுக்குச் செல்வோர் 35 ரிங்கிட்டும் ஆசியான் அல்லாத நாடுகளுக்குச் செல்வோர் 73 ரிங்கிட்டும் செலுத்த வேண்டும்.

அதேநேரத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் இரண்டாம் முனையத்தில் (KLIA 2) இருந்தும் மலேசியாவின் இதர விமான நிலையங்களில் இருந்தும் வெளிநாடு செல்லும் பயணிகள் 50 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here