நவீன வசதிகளுடன் மீண்டும் வருகிறது டைட்டானிக் கப்பல்

டைட்டானிக் கப்பலை நவீன வசதிகளுடன் மீண்டும் கட்டமைக்க, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தயாராகி வருகிறார்.

டைட்டானிக் கப்பலை அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக்(1997) திரைப்படம், அந்த கப்பல் குறித்தான பிரமிப்புகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது. உலகின் மிகப்பெரும் கப்பல் என்ற பறைசாற்றலுடன் கடல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் கப்பல், 1912 ஏப்ரல் 15 அன்று பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் சுமார் 1500 உயிர்கள் பலியாயின.

ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்வையிட இன்றைக்கும் சாகச சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்த பின்னரும், அதன் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் குறையவில்லை. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்கத்தொழில் கோடீஸ்வரரான கிளைவ் பால்மர் என்பவரும் இதில் அடங்குவார். வரலாற்றில் மிகவும் பிரபலமான டைட்டானிக் பயணக் கப்பலின் பிரதியை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த 2012-ம் ஆண்டு முதல் முனைந்து வருகிறார்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவை உலகம் அனுசரித்தபோது, 2012-ல் இன்னொரு டைட்டானிக்கை உருவாக்கும் திட்டத்தை பால்மர் பகிரங்கமாக அறிவித்தார். அதற்கான அவரது முயற்சிகள் அதன் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து கைகூடி வந்தன. ஆனால் அதன் பிறகான கொரோனா காலத்தின் கட்டுப்பாடுகளால், பால்மரின் டைட்டானிக் கனவு பரணுக்குப் போனது. ஒருவழியாக கொரோனா பரவல் சந்தடிகள் குறைந்ததில், விட்ட இடத்தில் ஆரம்பித்து டைட்டானிக் கப்பலுக்கான பிரதியை உருவாக்கும் முயற்சிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

இதன்படி அடுத்தாண்டு தொடங்கும் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 2027-ல் கடலில் மிதக்க டைட்டானிக்-2 காத்திருக்கிறது. புதிய கப்பலின் கன்னிப் பயணம், 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கிய டைட்டானிக்கின் அசல் வழியைக் கண்டறியும் என்றும் பால்மர் சுவாரசியம் தெரிவித்திருக்கிறார். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களுடன் 2,345 பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் புதிய கப்பல் கட்டமைக்கப்படுகிறது. இவற்றில் ஏறக்குறைய பாதி அறைகள் முதல் வகுப்பு பயணிகளுக்காக ஒதுக்கப்படும் என்றும் பால்மர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here