கோத்தா திங்கியில் மூவர் கொலை வழக்கு : 71 வயது முதியவருக்கு 7 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவல்!

கோத்தா திங்கி:

கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் மூன்று பேரைக் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 71 வயது முதியவரை, இன்று முதல் ஏழு நாட்களுக்குப் போலீஸ் காவலில் (Remand) வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட அந்த முதியவரை, வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நூர்காலிதா ஃபர்ஹானா அபு பக்கர் அனுமதி வழங்கினார்.

நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு வியட்நாமியப் பெண் என மொத்தம் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 37 முதல் 63 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட கடன் பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஜொகூர் மாநிலப் போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த 30 நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ‘பெனெல்லி எம்/சூப்பர்’ (Benelli M/Super) ரகத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட முதியவர் முறையான துப்பாக்கி உரிமம் வைத்துள்ளார் என்பதும், அவருக்கு இதுவரை எவ்விதக் குற்றப் பின்னணியும் இல்லை என்பதும் போலீஸ் சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தற்போது தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் (கொலை) கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here