கோலாலம்பூர்:
இங்குள்ள ஜாலான் மேடான் புத்ரா 6, கெப்போங்கில் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பில் நேற்று இரவு நடத்திய சோதனையில் மொத்தம் 59 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சொகுசுமாடிக் குடியிருப்பு வளாகத்தில் சட்டவிரோத குடியேறிகள் வசித்துவந்ததாக கண்டறியப்பட்ட 22 குடியிருப்புப் பிரிவுகளில், மலேசிய குடிவரவுத் துறையின் 33 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களால் நள்ளிரவு 12 மணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று, குடிவரவுத் துறையின் கோலாலம்பூர் பிரிவு இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யூசாஃப் கூறினார்.
பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெற்ற குடிநுழைவு துறை, இரண்டு வாரங்களுக்கு உளவு நடவடிக்கை செய்யப்பட்ட பின்னர் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், தகுதியான ஆவணங்களின்றி அதிக காலம் நாட்டில் தங்கியிருந்தது தொடர்பாக 1959/63 குடியேற்றச் சட்டம் பிரிவு 15 (1)(C), மற்றும் பிரிவு 6(1)(C) ஆகியவற்றை மீறியதற்காக 59 பேரை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் “2 இந்தோனேசிய பெண்கள், 9 வங்காளதேச ஆண்கள், ஒரு வியட்நாம் பெண், 2 நேபாள ஆண்கள், 10 இந்திய ஆண்கள் மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 19 பெண்கள் மற்றும் 16 ஆண்கள்ஆகியோர் அடங்குவர்,” என்று அவர் சொன்னார்.
மேலும், குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55E இன் படி சட்டவிரோத குடியேறிகளுக்கு வீட்டை வாடகைக்கு அனுமதிப்பது சட்டப்படி குற்றம் என்பதை வீட்டு உரிமையாளருக்கு நினைவூட்டுவதாக கூறிய அவர், அவ்வாறு வீட்டை வாடகைக்கு விட்டதாக நம்பப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு 25 சம்மன்களையும் வழங்கியதாகவும் கூறினார்.
இதற்கிடையில், தற்போது குடிநுழைவு துறை வழங்கியுள்ள சலுகையை பயன்படுத்தி, அதாவது ஆவணமற்ற வெளிநாட்டினரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டம் (PRM) மூலம், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.




















