கோலாலம்பூர்:
மாஸ்கோவில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மாஸ்கோவில் உள்ள மலேசியத் தூதரகம் வழியாக பதிவு செய்யப்பட்ட அனைத்து மலேசியர்கள் மற்றும் மலேசிய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 145 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த னர், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இராணுவச் சீருடை அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் கட்டடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைக் குறிவைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்கியதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் காரணமாக கலையரங்கக் கட்டடம் தீப்பிடித்துக்கொண்டது. வேகமாகப் பரவிய தீயின் காரணமாக அவ்விடம் எங்கும் கரும்புகை நிரம்பியதாகவும் கலையரங்கத்தில் இருந்தோர் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல விரைந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரஷ்ய சிறப்புப் படை தாக்குதல்காரர்களை வலைவீசித் தேடி வருகிறது.
கலையரங்கக் கட்டடத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை மோப்ப நாய்களைக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்நிலையில், மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் பலர் ஒன்றுகூடிய இடத்தில் தனது போராளிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பிறகு தங்கள் முகாம்களுக்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டதாகவும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கலையரங்கக் கட்டடத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் படங்களை ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ளது.


















