தேர்தல் முடியும் வரை நடிகர் சிவராஜ்குமாரின் திரைப்படங்கள், விளம்பரங்களை தடை செய்ய கோரிக்கை

தேர்தல் முடியும் வரை கர்நாடகாவில் நடிகர் சிவராஜ்குமாரின் திரைப்படங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சிவராஜ்குமார். மூத்த நடிகர் ராஜ்குமாரின் மகனான சிவராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிவராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் ஆர்.ரகு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மாநிலத்தில் மிகவும் பிரபலமாக உள்ள சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் முடியும் வரை அவரது திரைப்படங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தொலைக்காட்சிகளில் வரும் அவரது விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் எனவும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படங்கள் அடங்கிய பேனர்களையும் அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக முறையில் அவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தேர்தல் நேர்மையாக நடைபெற இது போன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜகவின் இந்த திடீர் கோரிக்கை கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவராஜ்குமார் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷிமோகா தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here