ஜகார்த்தா:
மாஸ்கோ தாக்குதல் போல் இந்தோனேசியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தோனேசிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு இசைக்கூடத்தில் கடந்த 23.3.2024ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 130க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்எஸ் பயங்கரவாதக் குழு பொறுப் பேற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் இதே பாணியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அந்த நாட்டின் அரசியல், சட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹாடி ஜாஜான்டோ நேற்று (மார்ச் 25) நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
ஈஸ்தர், ஈகைப் பெருநாள் போன்ற மத நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயார்நிலையில் உள்ளது என்று அமைச்சர் ஹாடி கூறினார்.
மேலும், இதுபோன்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் சுய தீவிரவாதச் சிந்தனையை வளர்த்துக்கொண்ட தனிநபர்களையும், பயங்கரவாதக் குழுக்களையும் அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று அமைச்சர் ஹாடி தெரிவித்தார்.
இதில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு முகவை (பிஎன்பிடி), உளவுத்துறை, பயங்கரவாதத்திற்கு எதிரான காவல் படை ஆகிய அமைப்புகளுடன் பாதுகாப்புத்துறை இணைந்து செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் ஹாடி கூறினார்.
செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட பிஎன்பிடி தலைவர் ரிக்கோ அமெல்ஸா, “சமூக ஊடகங்களில் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர். பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்போர், பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,” என்றார்.
மேலும் உலகின் எந்த மூலையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும் அதே பாணியில் இந்தோனேசியாவில் தாக்குதல் நடத்தப்படும் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம் என்று, பயங்கரவாதச் சித்தாத்தம் குறித்த ஆய்வு நிலையத்தின் மூத்த ஆய்வாளர் முஹ் தவ்ஃபிகுரோமன் தெரிவித்துள்ளார்.
சென்ற 2013ஆம் ஆண்டு நடந்த போஸ்டன் மாரத்தோன தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 260க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலில் பிரஷர் குக்கர் பாணி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த வெடிகுண்டு கைப்பேசி மூலம் இயக்கப்பட்டது. காவல்துறை மற்றும் பொதுமக்களை குறிவைத்து ஆறு முறை தாக்குதல் நடத்த முயற்சி நடத்தப்பட்டது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.




















