நிறுவன பெயருக்கு தீராத களங்கம்; 38 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு கேகே மார்ட் விநியோகஸ்தர் மீது வழக்கு

நிர்மலா செல்வம்

நிறுவன பெயருக்கு தீராத களங்கத்தை விளைவித்து மலேசிய பங்குச் சந்தையில் இடம்பெற முடியாமல் செய்ததற்காக காலுறை விநியோகம் செய்த ஓர் உள்நாட்டு நிறுவனத்தின் மீது கேகே சூப்பர் மார்ட் – சூப்பர் ஸ்டோர் செண்டிரியான் பெர்ஹாட், 38 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறது.

கேகே சூப்பர் மார்ட் வழக்கறிஞர் டத்தோ டேவிட் குருபாதம் இதனை உறுதிப்படுத்தினார். ஷாஆலம் உயர்நீதிமன்றத்தில் இந்த சிவில் வழக்கு திங்கட்கிழமை தொடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

சர்ச்சைக்குரிய அந்த காலுறையை விநியோகம் செய்த ஸின் ஜியான் சாங் செண்டிரியான் பெர்ஹாட், அதன் இயக்குநர் சோ சின் ஹுவாட் ஆகியோர் மீது இந்த சிவில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய வர்த்தகத்தில் இந்த நிறுவனம் சட்டத்துக்கு புறம்பாக தலையிட்டிருக்கிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கு மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த காலுறையை விநியோகித்த ஸின் ஜியான் சாங் செண்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் சர்ச்சைக்குரிய காலுறையை விநியோகம் செய்து முஸ்லிம் மக்களின் கோபத்திற்கு தம்முடைய நிறுவனத்தை தள்ளியிருக்கிறது என்று கேகே சூப்பர் மார்ட் அந்த வழக்கு மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.

இதனால் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு தீராத களங்கத்தையும் விளைவித்திருக்கிறது. மேலும் பங்குச் சந்தையில் இடம்பெறுவதற்கு நிறுவனம் மேற்கொண்டிருந்த முயற்சிகளும் தற்போது தடை பட்டிருக்கிறது.

இந்த இழப்புகளை ஈடுகட்டுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களுக்கு 38 மில்லியன் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்று கேகே சூப்பர் மார்ட் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று டத்தோ டேவிட் குருபாதம் தெரிவித்தார்.

ஸின் ஜியான் சாங் நிறுவனமானது சீன நாட்டைச் சேர்ந்த மூ மியான் கிங் ஹோசேரி கம்பெனி லிமிடெட் நிறுவனம் இந்த தவறை செய்தது என்பதை மார்ச் 19ஆம் தேதி ஒப்புக்கொண்டது.

தான் ஆர்டர் செய்த 18,800 ஜோடி காலுறைகளில் சர்ச்சைக்குரிய 5 ஜோடிகளை அதில் சேர்த்திருந்ததை மூ மியான் கிங் ஹோசேரி கம்பெனி லிமிடெட் ஒப்புக்கொண்டதையும் அது சுட்டிக்காட்டியது.

ஒரு நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த களங்கத்திற்கு தீர்வு காண்பதற்கு சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது வழக்குத் தொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஸின் ஜியான் சாங் நிறுவனம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here