மலேசியர்களுக்காக போராடிய ‘ஆண்டி பெர்சே’ ஆன் ஊய் காலமானார்

நிர்மலா செல்வம்,

கோலாலம்பூர்:

‘ஆண்டி பெர்சே’ என்று பிரபலமாக அழைக்கப்பட்ட 78 வயது ஆன் ஊய் இன்று 26.3.2024 செவ்வாய்க்கிழமை காலமானார். முன்னாள் ஆசிரியையான அவரின் மறைவு செய்தியை பெர்சே அமைப்பு அறிவித்தது.  

முன்னாள் ஆங்கில ஆசிரியையான அவர் 2009 ஜூலை 2ஆம் தேதி மலேசியாவின் ஜனநாயகத்தை காப்பதற்காக நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டார். கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீரங்கிகள் போன்றவற்றையும் அவர் எதிர்கொண்டார்.

மஞ்சள் நிற டீ– சட்டை அணிந்து வௌ்ளை சாமந்திப் பூவை கையில் ஏந்தி இருந்த அவர் மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. பெர்சே 2 பேரணியில் கலந்து கொண்டு நடைப்பயணமாக ஊர்வலம் வந்த பெர்சே போராளிகள் மீது துங் சின் மருத்துவமனைக்கு முன்புறம் எஃப்ஆர்யு போலீஸ் தண்ணீர் பீரங்கிகள், ரசாயனம் கலந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தன. அதில் சிக்கிக் கொண்டவர்களில் ஆண்டி பெர்சேயும் ஒருவராவார்.

அந்தப் போராட்டத்தில் அவர் லட்சக்கணக்கான சமானிய மலேசியர்களைப் பிரதிநிதித்து கலந்துகொணடார் . நாட்டிற்காக, மக்களுக்காக துணிந்து குரல் கொடுப்பவராக அவர் திகழ்ந்தார்.
தவறு நடக்கும்போது அதை தட்டிக் கேட்கும் துணிச்சல் நமக்கு இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஆன் ஊயின் மரணம் மிகப் பெரிய இழப்பு. அவரின் போராட்டங்களை மலேசியர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

பினாங்கில் பிறந்தவரான ஆன் ஊய், 2004ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் குடியேறிய பின்னர் பெர்சே பேரணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

2011 இல் கோலாலம்பூரின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட பெர்சே 2.0 பேரணியில் அவர் பல்லாயிரக்கணக்கான மலேசியர்களோடு கலந்து கொண்டது சாமானிய மலேசியர்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.

கோலாலம்பூரில் நடைபெற்ற பெரும்பாலான பிரமாண்ட பேரணிகளில் தவறாமல் கலந்துகொண்ட ‘ஆண்டி பெர்சே’ மலேசியர்களின் இதயங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here