மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு; விசாரணை கோரியது KK மார்ட்

கோலாலம்பூர்:

“அல்லாஹ்” என்ற வார்த்தை கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததாக KK சூப்பர் மார்ட்டுக்கு எதிராக ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK மார்ட் நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் பிரிவு 298, அதே நேரத்தில் இந்தக் காலுறைகளை விநியோகம் செய்ததற்காக Xin Jian Chang நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் 109, ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது. 

இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இக்குற்றச்சாட்டுக்கள் ஷாஆலம் செஷன்ஸ் நீடிமன்ற நீதிபதி முஹமட் அனாஸ் மஹாட்ஸிர் முன்னிலையில் வாசிக்கப்பட்டப்போது, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான டத்தோ ஶ்ரீ கேகே சாய், அவரது மனைவி லோ சியூ முய் ஆகியோர் தங்களிக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தலா RM10,000 ஜாமீன் அனுமதித்த நீதிபதி, வழக்கை வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக மார்ச் 16 ஆம் நாள், KK மார்ட் நிறுவனம் அனைத்து மலேசியர்களிடம், குறிப்பாக முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, பொது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த நோக்கமும் தமக்கு இல்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தது. சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ கேகே சாய் கண்ணீர் மல்க பொது மன்னிப்பு கேட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here