நாடு முழுவதிலும் கடந்த 2023ஆம் ஆண்டில் அரசாங்கம், தனியார் பணியிடங்களில் மொத்தம் 265 குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டதாக சமூக நல இலாகா (ஜேகேஎம்) தெரிவித்தது. இந்த 265 மையங்களில் 221 பராமரிப்பு மையங்கள் அரசாங்கத்துறைகளின் கீழும் எஞ்சிய 44 மையங்கள் தனியார் துறைகளின் கீழும் செயல்படுகின்றன என்று மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்ஸி ஷுக்ரி தெரிவித்தார்.
பணியிடங்களில் பராமரிப்புப் மையங்களை திறப்பதற்கு அரசாங்கம் எப்போதும் ஊக்கமளித்து ஆதரவாக இருக்கும். பெற்றோர் தத்தம் வேளைகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு முயற்சியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் சிறந்த சேவைத் தரத்தை உறுதி செய்வதோடு உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்வதற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க அலுவலகங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை திறக்கும் திட்டம் குறித்து அறிந்து கொள்ள விரும்பிய கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மஸ்தூரா முகமட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது டத்தோஸ்ரீ நான்ஸி இத்தகவல்களை வழங்கினார்.
பணியிடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை திறக்க விரும்பும் தரப்பினர் அருகில் உள்ள ஜேகேஎம்–இல் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தனியார் குழந்தைகள் பாரமரிப்பு மையங்களில் நிகழும் சிறார் துன்புறுத்தல், மரண சம்பவங்கள் போன்றவற்றுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நாடாளுமன்ற மக்களவையில் இதன் தொடர்பில் கூடுதல் கேள்வி எழுப்பிய ஃபோங் கூய் லூனுக்கு பதிலளிக்கும்போது குறிப்பிட்டார்.




















