ஆபாச குழுக்களை அனுமதிக்கும் எக்ஸ் தளம்; மீண்டும் சர்ச்சையில் எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தை சகலத்துக்குமான சமூக ஊடகமாக மாற்றும் முயற்சியில் ஆபாச குழுக்களுக்கும் அனுமதி வழங்க இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல சமூக ஊடக தளமான ’ட்விட்டர்’ எலான் மஸ்க் கைக்கு வந்த பிறகு, சகலத்துக்குமான தளமாக அது மாற்றப்பட்டு வருகிறது. இதனை, வருமானம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ட்விட்டர் சீரழிக்கப்படுவதாக அதன் பயனர்கள் குறைபட ஆரம்பித்தனர். அவற்றை செவிமெடுக்காத எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரிசையில் ட்விட்டருக்கு ’எக்ஸ்’ என நாமகரணமிட்டார். ஆபாச தளங்களுக்கான அடையாளப் பெயராகிவிடும் என ட்விட்டர் பயனர்கள் கேலி செய்தனர். நடைமுறையில் எக்ஸ் தளத்தின் உள்ளடக்கத்திலும் ஆபாசங்களை அடுக்க அனுமதித்து வருகிறார் எலான் மஸ்க்.

சமூக ஊடகங்களின் ஆகப்பெறும் பாதிப்புகளில் ஒன்றாக ஆபாச களஞ்சியங்கள் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தின் பல்வேறு தடுப்பு மற்றும் தணிக்கை நடைமுறைகளை வைத்து ஆபாசங்களை ஓரளவுக்கேனும் அவை கட்டுப்படுத்தவும் முயன்று வருகின்றன. ஆனால் எக்ஸ் தளத்தில் ஆபாசத்துக்கு அகலக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வீடியோக்களின் நீளம் பல மணி நேரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதும், யூடியூப் போல வர்த்தக வருமானத்தில் பயனருக்கும் பங்கு தர முன்வந்ததும் ஆபாசக் குப்பைகளை எக்ஸ் தளம் அதிகம் காண்பிக்க ஆரம்பித்துவிட்டது.

இது பிற பயனர்களை முகம் சுளிக்கச் செய்வதோடு, வயதில் இளையவர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைக்கு ஆளாக்கியது. தற்போது அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், ஆபாசங்களுக்கு என தனியாக வயது வந்தோருக்கான குழுக்கள் தொடங்க எக்ஸ் தளம் முடிவு செய்துள்ளது. இதில் தங்களது வயதினை உறுதி செய்வோருக்கு உள்ளே அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே எந்தவொரு தடுப்போ தணிக்கையோ இன்றி ஆபாசங்களை எக்ஸ் தளம் அள்ளித்தெளித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாசத்தை மட்டுமே புகாரின் பெயரில் நீக்கி வருகிறது.

தற்போது, ​​எக்ஸ் தளத்தின் கொள்கைகள் ’கிராஃபிக் மீடியா மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கம்’ என்ற பெயரில் ’பொதுவில் தடைசெய்யப்பட்ட நிர்வாணம் மற்றும் பாலியல் நடத்தை சார்ந்த பதிவுகளை 18 வயதிற்குட்பட்டோர் அல்லது தங்களின் சுயவிவரத்தில் பிறந்த தேதியை சேர்க்காத பார்வையாளர்களுக்கு’ கட்டுப்படுத்துகிறது. அதாவது ஒருவரின் சுயவிவரத்தில் இடம்பெறும் பிறந்த தேதி ஒன்றை மட்டுமே வைத்து வயது வந்தோருக்கான பதிவுகளை பயனர்களுக்கு அனுமதிக்க இருக்கிறது.

இதுவும் கூட அண்மைக்காலமாக பதின்வயதினர் ஆன்லைனில் பாதுகாப்பாக சஞ்சரிப்பதை உறுதிபடுத்துவதில், அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் அதிகம் அக்கறை காட்ட ஆரம்பித்த பிறகே எக்ஸ் தளத்தின் மாற்றத்துக்கு சாத்தியமானது. மற்றபடி ‘சட்டத்துக்கு புறம்பாக இல்லாத அனைத்துக்கும் எக்ஸ் தளத்தில் அனுமதி உண்டு’ என வெளிப்படையாகவே எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆபாசங்களை படையலிடுவதில் எக்ஸ் தளத்தின் அலட்சியம் தொடர்பாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எலான் மஸ்க்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here