வங்கி கணக்குகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் விற்பனை; வங்கி அதிகாரிகள் உட்பட 16 பேர் கைது

ஷா ஆலம்:

மோசடி நடவடிக்கைகளுக்காக வங்கி கணக்குகள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை வாங்கி விற்கும் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் நம்பப்படும் கும்பலைச் சேர்ந்த இரண்டு வங்கி அதிகாரிகள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 20 மற்றும் 22 க்கு இடையில் கோம்பாக்கைச் சுற்றியுள்ள பல சோதனைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நைஜீரிய பெண் என்று கூறிய அவர், குறித்த கும்பலிடமிருந்து 31 செல்போன்கள், 30 ஏடிஎம் கார்டுகள், பிரிண்டர், லேப்டாப், பல்வேறு ஆவணங்கள் அடங்கிய கோப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.

“இந்தக் கும்பலிம் மூளையாகக் கருதப்படும் ஒரு சந்தேக நபர், குற்றப் பின்னணி கொண்டவர் மற்றும் குற்றத் தடுப்புச் சட்டம் 1959 இன் கீழ் ஒருமுறை தடுத்து வைக்கப்பட்டார்” என்றும் அவர் இன்று (மார்ச் 29) நடந்த ஒரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

வங்கிக் கணக்குகளை திறக்கவும், அவற்றை மோசடிக் கும்பல்களுக்கு விற்கவும் RM500 முதல் RM1,500 வரை பணம் செலுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

“பின்னர் குறித்த வங்கிக் கணக்குகள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை நாடு முழுவதும் உள்ள ஏனைய மோசடி கும்பல்களுக்கு இவர்கள் வாடகைக்கு அல்லது விற்பனை செய்வார்கள் என்று எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த வங்கி கார்டுகள் தலா RM8,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த ஆறு மாதங்களில் 40 கணக்குகளைத் திறக்க வங்கி அதிகாரிகள் உதவியதாகவும், அவர்கள் செயலாக்கிய ஒவ்வொரு ஏடிஎம் கார்டுக்கும் சுமார் RM250 சிண்டிகேட்டிடம் வசூலித்ததாகவும் ஆணையர் ஹுசைன் கூறினார்.

“சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஐந்து வங்கிக் கணக்குகள் RM2.3 மில்லியன் இழப்பு தொடர்பான 15 ஆன்லைன் மோசடி வழக்குகளில் பயன்படுத்தப்பட்டன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 03-2052 9999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here