கெசுமாவில் 100 நாட்கள் தேசிய சமூகப் பாதுகாப்பு காப்புறுதி அம்சங்கள் உருமாற்றம்

கோலாலம்பூர்:

ணியிடத்தில் ஏற்பட்ட விபத்தால் மரணமுற்ற ஒருவரின் பெற்றோரை நான் கடந்த டிசம்பர் மாத இறுதியில் சென்று சந்தித்தேன். இறந்தவருக்கு இப்போதுதான் 28 வயதாகின்றது.

வயதான பெற்றோருக்கு இவர் மட்டுமே ஒரு தூணாக இருந்தார். இந்நிலையில் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான உதவித் தொகை 2,000 ரிங்கிட்டை சொக்சோ சார்பில் அவரின் குடும்பத்தாருக்கு வழங்கினேன்.

அதுமட்டுமன்றி மாண்டவரின் பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் இழப்பீட்டுத் தொகையாக 702 ரிங்கிட் வழங்கப்படுகின்றது. இந்த தொகையானது அந்த பெற்றோரின் இறுதிக்காலம் வரையில் வழங்கப்படும்.

அதிலும் அந்த 702 ரிங்கிட்டை நான் வழங்கியபோது அவரின் தாயார் கவலையுற்று அழுதார். காலமான பிள்ளையின் கடைசி நிதியாக இது கருதப்படுகின்றது. இந்நிலையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் நான் ஒரு அரசாங்க நிறுவனத்தின் முன்னாள் குமாஸ்தாவான இல்லத்தரசியை சென்று சந்தித்தேன்.

உடல் முழுவதுமாய் செயலிழப்பால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவரால் எழுந்து நிற்க முடியாது. உட்காரவும் முடியாது. பேசவும் முடியாது. ஒவ்வொரு நொடியும் சோபா நாற்காலியில் அமர்ந்தபடியே இருக்க நேரிடுகின்றது.

சொந்த உடம்பு இப்போடியோர் பெரும் சோதனையை எதிர்நோக்குவதை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை, மீண்டும் நான் சொக்சோ பிரதிநிதித்து அவரின் குடும்பத்திற்கு 1,550 ரிங்கிட் மாதாந்திர இழப்பீட்டுத் தொகையை வழங்கினேன்.

உடல் ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பதிலாக எந்த வார்த்தையும் ரொக்கத் தொகையும் ஈடாகாது. ஆனால் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்து விட்டால் சமூக பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் முன்னின்று சற்று நிம்மதி அளிக்கும்.

கெசுமாவின் வியூக திட்டத்தின் முதன்மை அம்சமாக சமூக பாதுகாப்பு காப்புறுதி

3 கே வியூகத் திட்டத்தை செயல் படுத்துவதில் சமூக நலன், திறன், தொழிலாளர் பயன் உள்ளிட்ட அம்சங்களை முன்னிருத்தும் மனிதவள அமைச்சு கெசுமா வாயிலாக தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்தை முக்கிய அம்சமாக முன்னிருத்துகின்றது.

அதிலும் சமூகப் பாதுகாப்பு என்பது வாழ்வாதார சவால்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் மனித அடிப்படை உரிமை என அனைத்துலக தொழிலாளர் சம்மேளனமும் கருத்தை முன்னிருத்துகின்றது.

இந்த சமூக பாதுகாப்பு செயல் பாடானது தொழிலாளர் நலனில் மட்டும் முன்னெடுக்கப்படும் முதலீடு கிடையாது. மாறாக பொருளாதார மேம்பாடு, செயலாக்க உயர்வுக்கும் வித்திடுகின்றது. சொக்சோ கீழ் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு காப்புறுதியை தரம் உயர்த்தும் வியூகங்கள் மூன்று படிவங்களாக பிரிக்கப்படுகின்றது.

குறுகிய கால திட்டம்: இருக்கின்ற சொக்சோ கொள்கைகளை தரம் உயர்த்துதல்

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் சொக்சோ அமைப்பு தமது 55ஆவது அலுவலகமாக பிரிஹத்தின் எனும் விவேக கைப்பேசி செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெய்நிகர் அலுவலக அறிமுகமானது சந்தாதாரர்கள், தொழிலாளர்களுக்கு இன்னும் நல்ல சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரிஹத்தின் செயலி, சொக்சோ அகப்பக்கம் வாயிலாக சந்தாதாரர்கள் தங்களின் சந்தா நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி சந்தா தரவையும் பதிவிறக்கம் செய்யலாம். நேரடி முன்னெடுப்பிலிருந்து தொழில்நுட்ப அம்சத்திற்கான இந்த மாற்றத்தின் வழி சந்தாதாரர்கள் எங்கிருந்தாலும் சொக்சோ திட்டத்தில் பதிவு செய்ய வழி வகுப்பதோடு சஹாபாட் பிரிஹத்தின், சொக்சோ சார்ந்த பொது தரவுகளுக்கும் வழிவிடுகின்றது.

மேலும் சம்பள சந்தாவின் மாதாந்திர விகிதத்தை 5,000 ரிங்கிட்டிலிருந்து 6,000 ரிங்கிட் வரை உயர்த்துவதற்கான மடானி அரசாங்கத்தின் 2024 வரவு செலவுத் திட்டத்தின் காப்புறுதியை நிறைவேற்றவும் மும்முரம் காட்டப்படுகின்றது. இந்த செயல் பாட்டை அமல்படுத்துவதற்கான சட்டதிருத்தத் தின் முதலாம் அமர்வு இவ்வாண்டு மார்ச் 26ஆம் தேதி மக்களவை கூட்டத் தொடரில் நடத்தப்பட்டது. இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கையானது 1.45 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை அளிக்கும்.

அவர்களின் காப்புறுதி சலுகைகள் 20.2 விழுக்காடு வரையில் அதிகரிக்கும். உதாரணத்திற்கு 6,000 ரிங்கிட் சம்பளம் பெற்ற ஒருவர் வேலை இழந்தால் வழக்கமாக 13,365 ரிங்கிட் இழப்பீடாக பெறுவார். ஆனால் இந்த சட்டதிருத்தத்தின் வழி அவர் 16,065 ரிங்கிட் வரையில் இழப்பீடு பெறமுடியும்.

அதேபோல் இறுதிச் சடங்கு செய்வதற்கான உதவித் தொகையும் 2,000 ரிங்கிட்டிலிருந்து 3,000 ரிங்கிட்டிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கான வயது வரம்பு 55 லிருந்து 60 வயதுக்கு உயர்த்தப்படுகின்றது.

நாடு தழுவிய அளவில் கூடுதலாக 720,000 இல்லத்தரசிகளுக்கு பாதுகாப்பை விரிவுபடுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. சம்பந்தப்பட்ட சட்டதிருத்தம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும்.

மத்திய கால திட்டம்: கிக்- பராமரிப்பு பொருளாதாரத் துறையில் இன்னும் அதிகமானோருக்கு சொக்சோவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை பிரபலப்படுத்துவது

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 வரவு செலவுத் திட்டத்தில் கிக், சொந்த தொழில் செய்பவர்களுக்கான சுயதொழில் சமூகப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்திற்கு உதவித் தொகையாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
இந்த உதவித் தொகை வாயிலாக சம்பந்தப் பட்ட துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தக் குறிப்பிட்ட காப்புறுதித் திட்டத்தின் 2ஆம் திட்ட சந்தாவுக்கு ஆண்டுதோறும் 23.30 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும். முன்னதாக இந்த திட்டத்திற்கு அவர்கள் ஆண்டுக்கு 232.80 ரிங்கிட் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது எஞ்சிய தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. தற்போது ஆண்டுக்கு 23.30 ரிங்கிட் அல்லது ஒரு நாளைக்கு 6 காசு என்ற கணக்கில் சந்தாதாரர்கள் 8 வகையான இழப்பீடுகளை பெற முடியும். உதாரணத்திற்கு மருத்துவம், தற்காலிகமாக உடல் பாகங்கள் செயலிழப்பு, நிரந்தரமாக உடல்பாகங்கள் செயலிழப்பு, வாரிசுதாரர்கள் உள்ளிட்ட அம்சங் களில் அவர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற முடியும்.

அதிலும் மலேசியா முழுவதும் உள்ள டாக்சி, பள்ளி பேருந்து ஓட்டும் 50,000 ஓட்டுநர் களுக்கு 100 விழுக்காடு இலவசமாக இந்த சுய தொழில் சமூகப் பாதுகாப்பு காப்புறுதியை வழங்க கெசுமாவோடு போக்குவரத்து துறை அமைச்சு இம்மாதம் மத்தியில் முன்வந்துள்ளது.

இவ்வாண்டில் சுயதொழில் சமூகப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்தின் கீழ் குறைந்தது 1,000,000 சந்தாதாரர்களை அடைவதே கெசுமாவின் இலக்கு. மேலும் கிக் துறையைச் சேர்ந்த தொழிலாளார்களை தவிர்த்து கெசுமா பராமரிப்புத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் மீதும் கவனம் செலுத்துகின் றது.
குறிப்பாக வீட்டில் குடும்பத்தை பராமரிக்கும் தாய்மார்கள் புனிதமாக கருதப்படுகின்றன. ஆனால் அவர்களின் பணியானது நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்கக் கூடிய நடவடிக்கை என்று பலரும் பார்ப்பதில்லை. இந்த பிரிவினர் தங்களுக்கான வேலை வாய்ப்பை விட்டுக்கொடுத்து இரவு பகல் பாராமல் குடும்பத்தை பராமரிகின்றனர். வேலையை விட்டுக்கொடுப்பதால் வருமானத்தை இழக்க நேரிடுகின்றது. அதுமட்டுமன்றி வீட்டில் செய்யும் பணிகளுக்கும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒருவேளை வீட்டுப் பணிப்பெண்கள் இந்த வேலையைச் செய்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

எனவே மடானி கொள்கைக்கு ஏற்ப கெசுமா இந்த பராமரிப்பு பொருளாதார தொழிலாளர்கள் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சமூக பாதுகாப்பு காப்புறுதியை வழங்க முற்படுகின்றது. இதன் அடிப்படையில் ிநாங்கள் எங்கள் இல்லத்தில்ீ இத்திட்டத்தை தொடங்க முனைந்தோம். மார்ச் மாதம் அனுசரிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை ஒட்டி கெசுமாவில் பணிபுரியும் 12,500 பேருக்கு இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு காப்புறுதியை வழங்க முனைந்தோம். இதில குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தங்களின் மனைவிகளின் பெயரை முன்மொழியலாம்.

அதேபோல் பி40 பிரிவைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை வழங்க ஆதரவளிப்போருக்கு 1967 வருமான வரிச்சட்டம் பிரிவு 44 (6) அடிப்படையில் வரிவிலக்கு வழங்க மகளிர் மேம்பாடு, குடும்ப, சமூக நல அமைச்சுடனான வியூக கூட்டமைப்பையும் கெசுமா ஒருங்கிணைத்தது.

அதில் இவ்வாண்டு மார்ச் மாதம் 10 உள்நாட்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டன. அதில் 4,653 பெண்களுக்கு இந்த குறிப்பிட்ட சமூகப் பாதுகாப்பை வழங்க அந்நிறுவனங்கள் 558,360 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளன.

இதனிடையே கடந்தாண்டு 200, 000 இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் இணைந்த நிலையில் இவ்வாண்டு குறைந்தது 500,000 இல்லத்தரசிகளை இணைக்க கெசுமா இலக்குக் கொண்டுள்ளது.

நெடுங்காலத் திட்டம்: இன்னும் விரிவாக
தேசிய சமூகப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்தை அமல்படுத்துதல்

இந்த மூன்றாம் கட்ட வியூகமானது 2 அம்சங்களை கொண்டுள்ளது. அதில் முதன்மையானது தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க முனைப்புக் காட்டப்படுகின்றது. அவர்கள் வேலைக்கு அப்பாற்பட்ட நேரத்தில், இடத்தில் எதிர்பாரா அசம்பாவிதங்கள் நிகழ்ந்து உடல் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு குடும்பத்தினரை பராமரிக்க முடியாத சூழலில் இந்த காப்புறுதி அவர்களுக்கு துணையாக இருக்கும்.

இந்த 24 மணி நேர சமூகப் பாதுகாப்பு காப்புறுதியானது ஒரு தொழிலாளருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்கின்றது.

உதாரணத்திற்கு இந்த 24 மணி நேர சமூகப் பாதுகாப்பின் வழி , நிரந்தரமாக வேலை செய்யும் வலுவை இழந்த தொழிலாளருக்கு அவரின் மாதாந்திர ஊதிய தொகையிலிருந்து 90 விழுக்காடு வரை மாதந்தோறும் இழப்பீடாக வழங்கப்படும். ஒருவேளை மரணம் ஏற்பட்டால் அவர்களின் வாரிசுகள் அந்த மாதாந்திர இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முன்னெடுப்பானது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் பொருளாதார சுமையை குறைப்பதோடு இதுபோன்ற காப்புறுதித் திட்டங்களை கொண்டிருக்காவிட்டால் வரி செலுத்துபவர் எதிர்நோக்க வேண்டிய சுகாதார நலன் சார்ந்த கட்டணங்களையும் குறைக்க முடியும்.

மாதத்திற்கு குறைந்தது 11 ரிங்கிட் சந்தா உயர்வு மூலம் மேற்கண்ட நன்மைகளை அடைய முடியும் என தொடக்கக் கட்ட மதிப்பீடு கூறுகின்றது. ஆனாலும் ஒவ்வொரு மாதமும் இந்த கூடுதல் சந்தா தொகையை யார் செலுத்துவார் என்பது இதன் தெளிவு மிக்க சவாலாக உள்ளது.

இதற்கிடையே இந்த சொக்சோவின் நெடுங்கால வியூகத்தின் 2ஆம் அம்ச மானது இன்னும் முழுமையாக சமூகப் பாது காப்பு காப்புறுதியாக மறு வாழ்வு சேவையை வழங்குவதாகும். இந்த 10 ஆண்டுகளில் சொக்சோ அமைப்பு மலாக்கா வில் உயர் தொழில்நுட்பமிக்க ஒரு மறு வாழ்வு மையத்தை நடத்தி வருகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 13,600 நோயாளிகள் சொக்சோவின் இந்த மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக 2023ஆம் ஆண்டு 2,521 பேர் மறு வாழ்வு சிகிச்சை பெற்ற நிலையில் அவர்களுள் 676 பேர் மீண்டும் வேலைகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பேராக்கில் கட்டப்படும் மேலும் ஒரு சொக்சோ மறு வாழ்வு மையம் இவ்வாண்டு இறுதியில் முழுமை பெறும். அதோடு இன்னுமொரு மீட்சி மையம் திரெங்கானு வில் கட்டப்படும்.

வரும் 5 ஆண்டு காலகட்டத்தில் சரவாக்கில் உட்பட மேலும் 3 சொக்சோ மறு வாழ்வு மையத்தை கட்டுவது கெசுமாவின் அபிலாஷையாகும். இதுதவிர நடவடிக்கை செலவுகளை குறைக்கவும் இன்னும் முழுமையான சேவையை வழங்கவும் சொக்சோ இந்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை எழுப்புவதற்கு இலக்கு கொண்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரையில் சந்தாதாரர்களுக்கு சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட சொக்சோ 300 மில்லியனிலிருந்து 350 மில்லியன் ரிங்கிட் வரையில் செலவிட நேரிட்டது.

தற்போது சொக்சோ அமைப்பு சிலாங்கூரில் கிள்ளான், ஷா ஆலம்- ஜோகூரில் பத்து பகாட், குளுவாங் கிளைகள் என நான்கு சிறுநீரக சுத்திகரிப்பு நிலையங்களை எழுப்பி வருகின்றது. சொக்சோவின் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களில் ஒவ்வொரு சிகிச்சை செலவுகளுக்கும் 15 விழுக்காடு வரையில் மிச்சப்படுத்த முடியும்.

மொத்தத்தில் ஒரு வியூக தரவு முன்னெடுப்பின் வாயிலாக தொழிலாளர் சமூக பாதுகாப்பு காப்புறுதி செயல்பாட்டை வலுப்படுத்த கெசுமா எண்ணம் கொண்டுள்ளது.

இந்த புதுப்பித்தல் செயல்பாட்டின் ஓர் அங்கமாக சவால்களை எதிர்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் இந்த பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் சமூகம் மட்டுமல்லாது முதலாளிகள், தொழிலாளர் களின் மத்தியில் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்தாது. மாறாக, தேசிய ஆள்பல வாழ்வாதார செயல்பாட்டினை உறுதி செய்யும் நெடுங் கால முதலீட்டுத் திட்டம் என்பதை இருக் கின்ற கட்டமைப்பில் தற்போதைய உணர்வு களுக்கு மதிப்பளித்து புரிய வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கெசுமா அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் 100 நாட்களில் பலதரப்பட்ட சமூகப் பாதுகாப்பு அம்சங்களுக்கான கொள்கை, புதுப்பித்தல் அம்சங்களோடு அமைச்சு பயணிக்கின்றது. கெசுமா இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

எனவே இன்னும் நெடுந்தூர போராட்டத்ததிற்கு இது முதல் கட்டம் என்பதால் கெசுமா ’Jalan teruih’ நிரப்ப முற்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here