பேங்காக்:
தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு நேற்றுக் காலை (ஏப்ரல் 4) திடீரென தீப்பற்றி எரிந்தது.
அதில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும், யாரும் காயமடையவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோ ஜாரோன் 2 எனும் பெயர் கொண்ட படகு, உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு சுராட் தானியிலிருந்து புறப்பட்டு, கோ தாவ் தீவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது தீ மூண்டது என்று கோ தாவ் காவல்துறைத் தலைவர் போல் கோல் சொக்சாய் சுத்திமெக் கூறினார்.
படகில் 97 பயணிகள், 11 சிப்பந்திகள் ஆகியோருடன் சரக்குகளும் இருந்தன.
கோ தாவ் படகுத்துறையைப் படகு நெருங்கியபோது அதன் இயந்திர அறையில் தீ மூண்டது என்றும், தகவல் கிடைத்ததும் கோ தாவ் தீவில் படகுச் சேவையை நடத்துவோரும் அதிகாரிகளும் படகில் இருந்தோரைக் காப்பாற்ற படகுகளை உடனடியாக அனுப்பிவைத்ததாகவும் அவர் சொன்னார்.