தண்ணீர் கேன் போட்டு வளர்ந்தேன்; ’காந்தாரா’ ரிஷப் ஷெட்டி

சினிமா பார்க்கக்கூட காசு இல்லாமல் வாட்டர்கேன் போடும் வேலை, ஹோட்டல், ரியல் எஸ்டேட் செக்டாரில் வேலை எனப் பல தொழில்கள் தனது ஆரம்ப காலத்தில் பார்த்ததாகக் கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா’ நாயகனின் இந்த கதையைக் கேட்ட ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

வெற்றிப் பெற்ற ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் போராடிய கதை ஒன்று இருக்கும். அப்படி தான் பட்ட கஷ்டம் குறித்து ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ‘காந்தாரா’வும் ஒன்று. இந்தக் கதையை எழுதி, இயக்கியவர் ரிஷப் ஷெட்டி. இப்போது ‘காந்தாரா2’ படத்தை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இரண்டாம் பாகத்தோடு ‘காந்தாரா3’யும் உருவாகிறது என உறுதிக் கொடுத்திருக்கிறார்.

தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவுக்கு நுழைவதற்கு முன்னால் தான் பட்ட கஷ்டம் பற்றி பேசியிருக்கிறார் ரிஷப். “சினிமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகராக வேண்டும் என்பதுதான் என் கனவு. ஆனால், அப்போது தியேட்டர் போய் ஒரு படம் பார்க்கக் கூட என்னிடம் காசு இருக்காது.

குடும்ப சூழ்நிலை காரணமாக என் அப்பாவிடமும் காசு கேட்க முடியாது. அதனால், நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே, கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தேன். தண்ணீர் கேன்களை விற்றேன், ரியல் எஸ்டேட் துறையில் வேலை செய்தேன், ஹோட்டல்களில் வேலை செய்தேன். என்ன கிடைத்ததோ எல்லாமே! இந்தப் பணத்தை வைத்து சினிமாவுக்குள் நுழையலாம் என்று நம்பினேன்.

அந்த சமயத்தில் எனக்கு எந்த தொடர்பும் சினிமாவில் இல்லை. அப்போது ஒரு கன்னட நடிகரின் வாழ்க்கைக் கதையைப் படித்தேன். அவர் உதவி இயக்குநராக இருந்து நடிகராக வளர்ந்ததைத் தெரிந்து கொண்டதும் நானும் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் முடித்தேன். பின்பு, உதவி இயக்குநராக 6-7 வருடங்கள் வேலைப் பார்த்தேன். பின்பே, நடிகரானேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here