சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வரவேற்றுள்ளார். மேலும் ஸ்டாலின், திருமாவளவனுக்காக குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்த விஜய் ஆண்டனி நானும் அரசியலுக்கு வரலாம் என கூறியிருப்பது அவர் எந்த கட்சிக்கு செல்கிறார்? என்ற பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி. இவரது பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக மிருநாளிணி, நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்பட பெரும் திரைப்பிரபலங்கள் நடித்துள்ளன. இந்த படத்தின் ப்ரோமேஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக நடிகர்கள் அரசியலில் பயணிப்பது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதன்படி பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நடிகர் விஜய் சினிமாவில் இருந்த வெளியேற இருப்பதாக கூறி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என கேள்வி கேட்டார். அதற்கு விஜய் ஆண்டனி, சினிமாவில் 17 வயதில் இருந்து நடிக்கிறார். ஒரே வேலை செய்கிறார். உச்சம் தொட்டுவிட்டார். பெரிய அளவில் இருக்கிறார். நமக்கு அன்பு கொடுத்த மக்களுக்கு ஏதோ செய்ய நினைக்கிறார். அது வரவேற்கத்தக்கது தான்” என்றார். இதையடுத்து நடிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வருகின்றனர். நடிகர்களின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, நீங்களும் கூட அரசியலுக்கு வர வேண்டும். நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை. அறிவு உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வர வேண்டும் என்றார்.
இந்த வேளையில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆன்டனி, ‛‛இப்போதைக்கு நான் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். அதுபற்றி (அரசியல்) யோசிக்க நேரமில்லை. எதிர்க்காலத்தில் நிறைய செய்துவிட்டோம். இனி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வகையில் வாய்ப்பு கிடைத்தால் வரலாம். ஆனால் அதுபற்றி இப்போது எனக்கு தெரியவில்லை’’ என்றார். அதன்பிறகு நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு நிறைய நடிகர்கள் ஆதரவு குரல் கொடுக்கிறாங்கள். நீங்க எப்படி? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் விஜய் ஆண்டனி், நான் நிறைய பேருக்காக குரல் கொடுக்கிறேன். திருமாவளவன், விஜய், ஸ்டாலினுக்காக கொடுக்கிறேன். நீங்களும் அரசியலுக்கு வந்தால் நான் உங்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன் என்றார்.