ஊழல் வழக்கு- நாட்டின் மிக பெரிய தொழிலதிபருக்கு தூக்கு! அதிரடி காட்டிய வியட்நாம்

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஊழல் புகாரில் அங்குள்ள மிகப் பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிரடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊழல் புகாரில் சிக்குபவர்கள் பெரும்பாலும் தப்பி விடுவார்கள். அப்படிச் சிக்கினாலும் சில ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.. அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு..

மரண தண்டனை: ஆனால், இங்கே வியட்நாம் நாட்டில் அங்குள்ள மிகப் பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு ஊழல் புகாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் வரலாற்றில் மிகப் பெரிய ஊழலாகக் கருதப்படும் இந்த ஊழலால் 27 பில்லியன் டாலர்கள் அதாவது 2.2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த வழக்கில் வான் தின் ஃபாட் நிறுவனத் தலைவரான ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்த போதிலும் அதை நீதிபதிகள் முழுமையாக நிராகரித்துவிட்டனர். குற்றவாளியின் நடவடிக்கை நாட்டின் தலைமை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மரண தண்டனை விதித்தனர். அதிலும் 5 வாரத்தில் விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பலருக்கும் தண்டனை: இது தவிர 85 பேர் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மரண தண்டை விதிக்கப்பட்டுள்ள லானின் கணவரும் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனது. ஹாங்காங் கோடீஸ்வரரான அந்த எரிக் சு நாப் கீக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லான் 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாகப் புகார் இருக்கிறது. ஆனால் மொத்த ஊழலின் உண்மையான மதிப்பு $27 பில்லியனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது வியட்நாம் நாட்டின் 2023 ஜிடிபியில் ஆறு சதவீதம் ஆகும். மோசடி செய்த முழு சேதத் தொகையையும் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வியட்நாம்: சர்வதேச அளவில் அதிக மரண தண்டைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. இருந்த போதிலும் ஊழல் வழக்குகளுக்கு வழக்கமாகச் சிறைத் தண்டனை தான் வழங்குவார்கள். ஆனால், அரிதிலும் அரிய நிகழ்வாக இந்த முறை மரண தண்டனை வழங்கியுள்ளனர். வியட்நாமில் உள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை துடைத்தெடுக்க மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே லான் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். லான் கடந்த 2022இல் கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தான் சுமார் 42 ஆயிரம் பேர் இவரால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அதிரடி: வியட்நாம் ஒற்றை ஆட்சி இருக்கும் கம்யூனிஸ்ட் நாடு என்பதால் மக்கள் கோபம் அரசு மீது அதிகப்படியாக எழுந்தது. அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், லான் கைது செய்யப்பட்டார். இப்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து சில வாரங்களில் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

புகார் என்ன: லானுக்கு வியட்நாமின் எஸ்சிபி வங்கியில் சுமார் 90% பங்குகள் இருக்கிறது. அவர் அந்த வங்கியில் இருந்து போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் லோனாக பணத்தை எடுத்துள்ளார். மக்கள் பணத்தை ஏமாற்றி எடுத்த அதை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது பெயரில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட சொத்துகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது மோசடியை மறைக்க அவர் பல அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்துள்ளார். அந்த அதிகாரிகளும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி பெரிய கோடீஸ்வரருக்கும் மரண தண்டனை கொடுத்த வியட்நாம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். சரியான தண்டனையா.. இல்லை அதிகபட்ச தண்டனையா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here