என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்…

சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 3 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் பிரச்சாரம் செய்கிறார். இத்தனை நாட்கள் மற்ற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த முதல்வர் இறுதிக்கட்டமாக இன்று சென்னையில் பிரச்சாரம் செய்ய உள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டுமே தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய அனுமதி உள்ளது. இதனால் தேர்தல் களம் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வருகிற புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் ஒவ்வொரு இரவும் அவருக்கு நீண்ட இரவாக இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப் படுகிறது. அதன்படி ஒவ்வொரு மணி நேரமும் கள நிலவரம் குறித்த அப்டேட்களை தீவிரமாக ஸ்டாலின் நிர்வாகிகளிடம் கேட்டு பெற்று வருகிறாராம். அப்போது, வேட்பாளர்கள் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் களநிலவரம் குறித்தும் மா.செ.க்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார் ஸ்டாலின்.

2 தொகுதிகளில் களநிலவரம் சரியில்லை: அந்த வகையில் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் உட்பட்ட சில சட்டசபை தொகுதிகளில் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று புகார் சென்றுள்ளதாம். கொங்கு மண்டலத்தில் கோவை அல்லாத ஒரு தொகுதியிலும், தென் மண்டலத்திலும் ஒரு தொகுதியிலும் கொஞ்சம் நிலைமை சரியில்லை என்று புகார் சென்றுள்ளதாம்.இங்கே நமக்கு வெல்ல வாய்ப்பு இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கொஞ்சம் நிலைமை இப்படியும் அப்படியுமாக இருக்கிறது. கவனமாகவே காய் நகர்த்த வேண்டும். கடைசி கட்ட பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்று தகவல்கள் சென்றுள்ளதாம்.

இது பற்றி அந்த 2 தொகுதியின் நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், எனக்கு அங்கிருந்து வர கூடிய தகவல்கள் சரியாக இல்லை. 2 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில சட்டசபை தொகுதிகளில் பணிகள் சரியாக நடப்பதாக எனக்கு தகவல் வரவில்லை. பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனே சரி செய்யுங்கள். எனக்கு வர கூடிய விபரங்கள் சரியாக இல்லை என்று மாவட்ட நிர்வாகிகளை போன் செய்து டோஸ் விட்டுள்ளாராம். இங்கே கடைசி இரண்டு நாள் பிரச்சாரம் கண்டிப்பாக தீயாக இருக்கும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here