காங்கிரஸுக்கு எகிறிய ஆதரவு.. ஆனால் ஒரு சிக்கல் இருக்கு

புவனேஷ்வர்: லோக்சபா தேர்தல் நமது நாட்டில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து தரப்பினரும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

லோக்சபா தேர்தல்: இதற்கிடையே இந்தி மாநிலங்களில் முக்கியமானதான ஒடிசாவில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது தொடர்பாக லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒடிசாவைப் பொறுத்தவரை பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் இடையே தான் போட்டி கடுமையாக இருக்கிறது. அங்கு மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்தாலும், அதை விடக் கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும் என்பதே லோக்போல் சர்வே கணிப்பாக இருக்கிறது.

யாருக்கு எத்தனை இடம்: அங்கு மொத்தம் 21 சீட்கள் இருக்கும் நிலையில், பிஜு ஜனதா தளம் 11 முதல் 12 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதா தளம் 7-9 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர அங்கு போட்டியிடும் இந்தியா கூட்டணி 1-2 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக லோக்போல் சர்வேயில் கூறப்படுகிறது.

காரணங்கள் என்ன: இது லோக்சபா தேர்தல் என்பதால் ஒடிசாவில் பாஜக வாக்குகளைப் பெறுவதில் மோடி பேக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பிஜு ஜனதா தளம் மிக மோசமான வேட்பாளர்களை அறிவித்துள்ளதும் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக மாறுகிறது. இதனால் கடந்த 2019 உடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு ஒடிசாவில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான விகே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு போலக் கட்சியில் முன்னிறுத்தி வருகிறார். இது பொதுமக்கள் மட்டுமின்றி பிஜு ஜனதா தள தொண்டர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இது தேர்தலிலும் அக்கட்சியின் வாக்குகளைக் கணிசமாகக் குறைக்கிறது.

காங்கிரஸ் கம்பேக்?: ஒடிசாவில் பாஜக மற்றும் நவீன் பட்நாயக் இடையே அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி இல்லை என்றாலும் இரு தரப்பிற்கும் இடையே மறைமுகமாக உறவு இருப்பதாகக் காங்கிரஸ் முன்னிறுத்தும் பிரச்சாரம் அங்கு ஒர்க் அவுட் ஆகிறது. இதனால் அங்குள்ள மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு மொத்தமாகக் காங்கிரஸ் பக்கம் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகள் குறித்து பிஜு ஜனதா தள அரசுக்குக் கண்டுகொள்ளவில்லை என்று பழங்குடியினரும் ஆளும் தரப்பு மீது கோபமாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஆதரவும் காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் காங்கிரஸ் வாக்கு வங்கி கணிசமாக அதிகரிக்கிறது. இருந்த போதிலும், அவை வெல்லும் அளவுக்கு போதுமானதாக இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சியால் 1 அல்லது 2 இடங்களில் மட்டுமே அங்கு வெல்ல முடியும் என்று லோக்போல் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த தேர்தல்: கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை ஒடிசாவில் மொத்தமுள்ள 21 சீட்களில் 12 இடங்களில் பிஜு ஜனதா தளம் வென்றது. பாஜகவின் என்டிஏ கூட்டணி அங்கு 8 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அங்கு வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here