தெக்குன் கடனுதவி குறித்த விழிப்புணர்வு: இந்திய வர்த்தகச் சங்கங்களுக்கு விளக்கமளிப்பு

இந்திய தொழில்முனைவோருக்கான தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் முயற்சிக்கு, இந்திய வர்த்தகச் சங்கங்களும் தோள் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதற்கு ஏதுவாக, நாட்டிலுள்ள முன்னணி இந்திய வர்த்தகச் சங்கங்களுக்கும் துறை சார்ந்த அரசு சாரா அமைப்புகளுக்கும் அண்மையில் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவிக்கு முறையே விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தெக்குன் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சார்பில், அவரின் அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் அக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

2024ஆம் ஆண்டு அரசாங்க பட்ஜெட்டில், இந்திய தொழில்முனைவோருக்கான தெக்குன் ஸ்புமி பிரிவுக்கு 3 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. இது போதாது என்று உணர்ந்த தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், தெக்குன் உள்நிதியிலிருந்து மேலும் 3 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீட்டைப் பெற்று தந்திருக்கிறார்.

ஒரு வரலாற்று திருப்பமான இந்த நகர்வுக்கு, இந்தியர்களிடையே அமோக ஆதரவும் பாராட்டும் கிடைக்கப்பெற்று வருவதாக டத்தோ அன்புமணி பாலன் தமது சிறப்புரையில் சுட்டிக்காட்டினார்.

தெக்குன் ஸ்புமி கடனுதவிக்கு  விண்ணப்பிக்க அடையாள அட்டை நகல், எஸ்.எஸ்.எம் நகல், பேங்க் கணக்கு விவரம், வியாபாரம் தொடர்பான புகைப்படம் என மொத்தம் 4 விதமான ஆவணங்கள் தேவை. இந்த தெக்குன் ‘ஸ்புமி’யின் கீழ் குறைந்த பட்சம் 1,000 ரிங்கிட் முதல் 1 லட்சம் ரிங்கிட் வரைக்குமான கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்த பட்சம் 50,000 ரிங்கிட் முதல் 1 லட்சம் ரிங்கிட் வரைக்குமான ‘SPUMI GOES BIG’ எனும் புதிய கடனுதவிக்கு விண்ணப்பிக்க மேற்குறிப்பிட்ட 4 ஆவணங்களோடு கூடுதலாக வருமான வரி ஆவணத்தை இணைக்க வேண்டும் என டத்தோ அன்புமணி விளக்கமளித்தார்.

ஏப்ரல் 15ஆம் தேதி முதற்கொண்டு இக்கடனுதவிக்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் வழி சுமார் 2,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர்கள் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்திய தொழில்முனைவோரின் உயர்வுக்காக அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் இந்த வாய்ப்பு வசதிகள் குறித்த தகவல்களை நம் சமூகத்தின் கடைநிலை மக்கள் வரைக்கும் கொண்டுச் சேர்க்கும் தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சின் முயற்சிகளுக்கு, இந்திய வர்த்தகச் சங்கங்களும் உதவிடவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, தெக்குன் ஸ்புமி பிரிவின் உயர் அதிகாரி பாலகுரு குருபதம், தெக்குன் வியாபாரக் கடனுதவி குறித்த மேலதிக விவரங்களை மிக எளிய முறையில் எடுத்துரைத்தார்.

பங்கேற்பாளர்களும் தங்களின் சந்தேகங்களுக்கு முறையான தெளிவு பெற்றுக் கொண்டனர். தெக்குன் வழங்கும் வாய்ப்புகள் குறித்த விவரங்களையும் தகவல்களையும் இந்திய சமூகத்திடம் சேர்க்கும் நடவடிக்கைகளில் தாங்கள் முனைப்பு காட்டுவோம் என கூட்டதில் கலந்து கொண்ட இந்திய வர்த்தகச் சங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் உறுதி அளித்தனர்.

டத்தோ ரமணனின் வருகைக்குப் பிறகுதான் முதன் முறையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இந்திய வர்த்தகச் சங்கங்கள் தெக்குன் தலைமையகத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here