இந்தியர்களின் தலைவிதி எப்போது மாறும்? கோலகுபுபாரு தொகுதி வாக்காளர்கள் கேள்வி

 

* இந்தியர்கள் எதிர்நோக்கும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள்
* இந்தியர் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
* இந்தியர்கள் பலர் வாடகை வீடுகளில் குடியிருக்கின்றனர்

நாங்கள் எதிர்நோக்கும் இரண்டு முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோலகுபுபாரு இந்திய வாக்காளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். கோலகுபுபாரு தொகுதியில் உள்ள இந்தியர்கள் வீடமைப்பு, வேலை வாய்ப்பு இல்லாத பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மே 11ஆம் தேதி கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்களுக்கு என்ன செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போகிறோம் என்றும் இந்திய வாக்காளர்கள் கூறியிருக்கின்றனர்.
கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் 40,226 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுள் 18 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்கள். இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறுமா அல்லது பெரிக்காத்தான் நேஷனல் இத்தொகுதியை கைப்பற்றுமா? அல்லது பார்ட்டி ராக்யாட் மலேசியா வெற்றி பெறுமா? இல்லை சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பதையெல்லாம் தீர்மானிக்கக் கூடியவர்களாக இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

முக்கிய பிரச்சினை

கோலகுபுபாரு தொகுதியில் உள்ள இந்தியர்கள் பலர் சொந்த வீடுகள் இல்லாத பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் என்று பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கே. கோபால் (வயது 59) தெரிவித்தார். இத்தொகுதி இந்தியர்களுள் பலர் வாடகை வீட்டில்தான் குடியிருக்கின்றனர்.
என்னுடைய குடும்பம் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறது என்று அவர் சொன்னார். இந்தியர்களுக்காக அதிகமான கட்டுபடி விலை வீடுகள் கட்டப்படவில்லை. மலிவு விலை வீடுகளும் கட்டப்படவில்லை என்று அவர் சொன்னார்.

வேலை இல்லை

இத்தொகுதியில் வேலை வாய்ப்பு இல்லாத பிரச்சினையும் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இப்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் அந்நியர் வசம் சென்றுவிட்டது என்றும் அவர் சொன்னார். குறிப்பாக அரசாங்க கட்டடங்களை சுத்தம் செய்யும் பணியில் கூட அந்நியர்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.
அண்மைய சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கக் கூடிய திட்டங்களை இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் முன்வைக்கலாம் என்று 54 வயதான எஸ். ரூபா என்பவர் சொன்னர்.
இப்போது எல்லாமே விலை உயர்ந்து விட்டது. வாழ்க்கைச் செலவின உயர்வு மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே நிறைய வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. இதனால் வாக்களிப்பதில் பலர் ஆர்வம் இன்றி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நிலைமை மாறவில்லை

பிரதான அரசியல் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இந்திய சமூகத்தின் தலைவிதி மாறவே இல்லை என்று 51 வயதான எம்.ரூபன் என்பவர் சொன்னார்.
இந்த இடைத்தேர்தலில வாக்களிப்பதற்கு ஆர்வம் இல்லை. வெளியில் தங்கியுள்ளவர்களும் திரும்ப வந்து வாக்களிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் ரூபன் தெரிவித்தார்.
கோலகுபுபாரு இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெகவின் பாங் சோக் தாவ், பெரிக்காத்தான் நேஷனலின் சார்பில் பெர்சத்து வேட்பாளர் கைருல் அஸாரி ஸாவுட், பிஆர்எம் கட்சி சார்பில் ஹபிஸா ஜைனுடின், சுயேச்சையாக ஞாவ் கி சின் போட்டியிடுகின்றனர். கோலகுபுபாரு தொகுதியில் 46 விழுக்காடு மலாய் வாக்காளர்களும் 30 விழுக்காடு சீன வாக்காளர்களும் 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் 5 விழுக்காடு மற்ற வாக்காளர்களும் உள்ளனர். வாக்களிக்க தகுதி பெற்றோர் எண்ணிக்கை 40,226 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here