சென்னை:
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் தொடர்ந்து தனது கருத்துகளை வெளியிட்டு வந்த அவர், பல்வேறு காணொளிகளையும் வெளியிட்டு தமிழக அரசியல் நிலவரம் குறித்து விமர்சித்து வந்தார்.
கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சுமார் 10 மாத சிறை வாசத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல் துறை அதிகாரிகள் குறித்து அண்மையில் கடுமையாக விமர்சித்து இருந்தார் சங்கர். குறிப்பாக, பெண் காவலர்கள் பற்றி சமூக வளைத்தளங்களில் அவர் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தேனி பகுதியில் இருந்த சங்கரை கோவை காவல் துறை கைது செய்துள்ளது.
அண்மைக்காலமாக தமிழக ஆளும் கட்சியான திமுக குறித்து ‘யுடியூப்’ தளம் மூலம் விமர்சித்த சங்கர், தமிழக முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களையும் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.