நமது செய்தியாளர், கே.வி.சுதன்
உள்நாட்டுத் தொழிலாளர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 65ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.
நாட்டில் இயங்கும் பல்வேறு தொழில்துறைகளிலும் அரசாங்க, தனியார் நிறுவனங்களிலும் ஏற்படும் ஆள்பலப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் தொழிலாளர்களின் வயது வரம்பை 65ஆக உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் பரவலாகக் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் நிலவும் ஆள்பலப் பற்றாக்குறைக்கு ஓய்வுபெறும் வயது வரம்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் 55, 65 வயதுடையவர்கள் ஓய்வுபெறும் காலகட்டத்தை அடைந்ததும் பணி ஓய்வு பெற்று விடுகிறார்கள்.
இருப்பினும், நம் நாட்டைப் பொறுத்தவரையில் 60 வயதைக் கடந்திருந்தும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் நல்ல திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படுகின்றனர். இருந்தும் கட்டாயப் பணி ஓய்வுபெறும் வயது 55இல் இருந்து 60 வயது என சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதால் பணி நீக்கம் செய்யப்பட்ட பின் அவர்களின் தொடர் வருமானம் பாதிக்கப்படுவதுடன் அவர்களை நம்பியிருக்கும் குடும்பமும் புதிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தள்ளப்படுகிறது.

மேலும், அவர்கள் முன்பு சார்ந்திருந்த நிறுவனங்களிலும் ஆள்பலப் பற்றாக்குறை எனும் புதிய பிரச்சினை உருவெடுப்பதும் அவர்கள் செய்த தொழிலைத் தொடர ஆளில்லை என்ற நிலையில் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை வருவிக்க வேண்டிய சிரமமான சூழ்நிலையும் உருவாகிறது. இந்நிலையில் ஓய்வு பெறும் வயது வரம்பை 65ஆக உயர்த்தினால் அதிகமான தொழில்துறைகளில் பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்யும் முற்போக்கான நிலை தென்படும்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்களில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறைக்கும் தற்காலிகத் தீர்வு ஏற்படும். மேலும், சம்பந்தப்பட்ட பணியாளருக்கும் தனது வேலையைத் தொடர்ந்து செய்யும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைவதுடன் தொடர்ந்து அதில் ஈடுபாட்டுடன் பணியாற்றுவார் என்கிறார் தனியார் பாதுகாவலர் நிறுவனமொன்றின் மேலாளரான ஜெயராமன் அன்னையா.
நாட்டில் 60 வயதைக் கடந்தவர்களில் பலர் வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், ஓய்வு பெறும் வயதுக் கட்டுப்பாட்டினால் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு நழுவிப்போய் விடுகிறது. இதன் தொடர்பில் தொழிலாளர்களின் வயது வரம்பை 60ஆக உயர்த்தும்படி எம்டியூசி எனப்படும் மலேசிய வர்த்தக, தொழிலாளர்கள் சம்மேளனம் சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்திடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தது. மேலும், அரசாங்கம் இதனைச் சரி செய்யுமாயின் தொழிலாளர்கள் பற்றாக்குறைப் பிரச்சினையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் அது கூறியிருந்தது. இருப்பினும், அப்பேச்சுவார்த்தை முழுமை பெறாமலும் ஒரு தீர்வை ஏற்படுத்தாத நிலையிலும் மௌன நிலையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது என்கிறார் கிள்ளான் செந்தோசாவில் வசிக்கும் 78 வயதான சுந்தரராஜூ முருகன்.

பெரும்பாலான சொந்தத் தொழில் செய்யும் வியாபாரிகளும் சொந்த நிறுவன நடத்துநர்களும் 60 வயதைக் கடந்தும் அவரவர் தொழிலில் திறமையும் அனுபவமும் கொண்டுள்ளதைப் பயன்படுத்தி 65, 70 வயது வரை தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். மேலும், உடல் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதால் தொடர்ந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதுடன் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும் ஆள்பலப் பற்றாக்குறை நிலவுவதைத் தவிர்க்க முடிகிறது. குறிப்பாக, உள்நாட்டுத் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கினால் அந்நிய நாட்டவர்களைப் பெரிதும் நம்பியிருக்கத் தேவையில்லை. அதற்கான அவசியமும் இருக்காது என்று ஸ்ரீ அண்டாலாஸ் சமூகச் சேவையாளரான சுந்தரம் சாய் ( வயது 68), பெரிச்சியப்பன் லெட்சுமணன் ( வயது 70) இருவரும் கருத்துரைத்தனர்.

இதைப்போல் பணி ஓய்வு பெறும் வயதுக் கட்டுப்பாட்டினால் தோட்டப்புறங்களில் 1,500 ரிங்கிட் சம்பளம் உட்பட வீடு, குடிநீர், மின்சாரம் போன்றவற்றை இலவசமாக வழங்கியும் வேலை செய்வதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்பில், 65 வயது வரை வேலை செய்யலாம் என்ற ஒரு மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்தினால் முன்பு அத்தொழிலில் ஈடுபட்டு தொடர்ந்து நல்ல உடல் திடமும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தொடர்ந்து அதே வேலையை மீண்டும் தொடர்வதற்குரிய வழியும் வாய்ப்பும் ஏற்படும். அப்படித் தொடர்ந்து சில வருடங்கள் வேலை செய்பவர்களிடையே வருமானம் ஈட்டும் சிந்தனையும் அதிகரிக்கும். மேலும், பொருளாதார சேமிப்பை ஓரளவு உயர்த்தி குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கும் நிலையையும் உருவாக்கலாம் என்று பாதுகாவலர் நிறுவனமொன்றின் 57 வயது நிர்வாகியான புனிதன் கன்னியப்பன் சுட்டிக் காட்டினார்.

நடப்பு நிலவரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு துறைகளில் வேலை செய்ய ஆள்பலப் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதாகவும் வெளிநாட்டிலிருந்து வேலையாட்களை வருவிக்கும் நிலையே காணப்பட்டு வருவதாகவும் ஆய்வொன்று கூறுகிறது. அதிலும் வெளிநாட்டினர் பெரும்பாலோர் வேலைக்கேற்ற தகுதிச் சான்றிதழ் இன்றியும் பெர்மிட் அனுமதி இன்றியும் வேலை செய்து வருவதையும் காண முடிகிறது. இந்நிலையில், உள்நாட்டுத் தொழிலாளர்களின் பணி ஓய்வு பெறும் வயது வரம்பை அதிகரித்தால் ஆள்பலத் தேவைக்குரிய பல இடங்களில் போதுமான பணியாளர்களை வேலைக்கமர்த்த ஏதுவாக இருக்கும். மேலும் இதனால் 60 வயதைக் கடந்தவர்கள் அந்திம காலத்தில் பயன்பெறுவது மட்டுமன்றி நாட்டின் மேன்மைக்கும் தொழில், வர்த்தக வளர்ச்சிக்கும் பங்களிப்பாக அமையும் எனப் பொதுமக்கள் கருத்து கூறியதுடன் அரசாங்கம் இதனைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.











