விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஜெகன் கட்சி பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், அங்கு நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜாவும் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் அங்கு ரோஜாவுக்குப் படுதோல்வி உறுதி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.
ஆந்திரப் பிரதேச சட்டசபை: இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், ஆந்திரா சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார்.
ஆந்திராவில் இப்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது. ஜெகன் கட்சியில் இருந்த பல முக்கிய தலைவர்களும் தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. அவர் இந்த முறை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு எதிராகத் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜி பானு பிரகாஷ் என்பவர் போட்டியிட்டார். அதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகேஷ் ரெட்டி போட்டியிட்டார்.
பின்னடைவு: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அங்கு மிகப் பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அது ரோஜா போட்டியிட்ட நகரி தொகுதியிலும் எதிரொலித்துள்ளது. ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 5640 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தெலுங்கு தேசம் வேட்பாளர் பானு பிரகாஷ் 12,267 வாக்குகளைப் பெற்றுள்ளார். ரோஜா வெறும் 6627 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ராகேஷ் வெறும் 316 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
என்ன காரணம்: தேர்தல் முடிவுகளில் இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஆந்திராவின் நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்குப் படுதோல்வி உறுதி என்றே கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்றே ரோஜா தனக்கு எதிராகச் சொந்த கட்சித் தலைவர்களே வேலை பார்த்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் என்ன நடந்தது: கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஜெகன் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151இல் வென்று அசுர பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 இடங்களில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..




















