தொழில்நுட்ப பயிற்சி, தொழிற்கல்வி, கல்வி (TVET) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வியும் பயிற்சியும் நாட்டின் தொழில் துறைகளுக்கு தேவைப்படும் திறன்மிக்க மனிதவளத்தை கொடுக்கக் கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று கெசுமா எனப்படும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அமைச்சின் கீழ் செயல்படும் மனிதவள இலாகாவின் பயிற்சிக் கழகம் நாடு முழுவதும் 32 பயிற்சிக் கழகங்களை கொண்டிருக்கிறது.
50 வகையான பாடங்களை இக்கழகங்கள் வழங்குகின்றன. பள்ளிப்படிப்பை முடித்ததும் மாணவர்களுக்கு 112 வகை பயிற்சிகளை மனிதவள இலாகா பயிற்சி கழகம் வழங்குகிறது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
இந்த கல்விக்கழகங்களில் சான்றிதழ், டிப்ளோமா போன்றவற்றோடு பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. திவெட் பயிற்சிகள் கல்வித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதாக உள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்குத் தேவையான ஆற்றல் – திறன்மிகு மனிதவளத்தை வழங்கும் மிகப் பெரிய பொறுப்பை கெசுமா ஏற்றுள்ளது. மலேசிய இளைஞர்களுக்கு செல்லும் இடமெல்லாம் உயர்வைத் தர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு கெசுமா பாடாற்றி வருகிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
மலேசியர்கள் குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் தொழிற்கல்வியில் உயர்திறன் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல்வேறு தொழில் கல்வித் திட்டங்களை வகுத்து வருகிறது என்றும் அமைச்சர் சொன்னார்.
TVETகல்விக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
TVET கல்வித்துறையை பலப்படுத்துவதற்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு மடானி அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இலக்கு வைக்கப்படும் தரப்பினரை திறன்மிக்க மனித வளமாக உருவாக் குவதற்கு இந்த நிதி வழங்கப்படும் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் தலைமையில் தேசிய TVET மன்றம் அமைக்கப்பட்டு திவெட் கல்விக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அமைச்சரவை அவருக்கு முழு அதிகாரம் வழங்கியிருக்கிறது.
மின்சார வாகனம், சைபர் பாதுகாப்பு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மின்சாரத் தொழில்நுட்பம் உட்பட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த மனிதவளத்தை உருவாக்குவதுதான் திவெட் கல்வியின் உச்ச நோக்கமாகும். TVET கல்வியின் வெற்றிக்குப் பின்னணியில் கெசுமா, விவசாயம்– உணவுப் பாதுகாப்பு, இளைஞர் விளையாட்டுத்துறை, கல்வி, உயர்கல்வி போன்ற அமைச்சுகளும் இருக்கின்றன.
TVET கல்வித்திட்டத்தின் கீழ் உடற்பேறு குறைந்தவர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் திறந்து விடப்படும் என்று பிரதமர் அன்வார் உறுதியளித்திருக்கிறார். அதேபோன்று சபா, சரவாக் மாநிலங்களை சேர்ந்த சுதேசி மக்களின் பிள்ளைகளுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
TVET கல்வியை பலப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுகள் வழங்கப்படும். இங்கு வெறும் வேலை வாய்ப்புகள் பற்றி மட்டும் அரசாங்கம் சிந்திக்கவில்லை. மாறாக உயர் சம்பளத்தை நாம் இளைஞர்கள் பெற வேண்டும் என்பதுதான் தலையாய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனா வழங்கும் 5,000 திவெட் கல்வி வாய்ப்புகள்.
அண்மையில் சீனாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்த துணைப் பிரதமரும் தேசிய திவெட் மன்ற தலைவருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கிட்டத்தட்ட 5,000 க்கும் அதிகமான TVET கல்வி, பயிற்சி வாய்ப்புகளை பெறுவதில் வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 200 சீன நிறுவனங்கள் மலேசியர்களுக்கு TVET கல்வியையும் பயிற்சியையும் வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன.
இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் TVET கல்வியை தங்களது முதன்மைத் தேர்வாக கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மனிதவளத் தேவையை நிறைவு செய்வதற்கு திவெட் கல்வி அதீத பங்காற்றுககிறது. மேலும் உயர் சம்பளத்தை வழங்கக் கூடியதாகவும் இக்கல்வி விளங்குகிறது.
ஜப்பான் போன்று நம்முடைய நாடும் வளர்ச்சியின் உச்சத்தை எட்டும் வகையில் நாமும் அதற்கேற்றவாறு முன்னேறிச் செல்ல வேண்டும். ஜப்பானில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் TVET கல்வியை அவர்களது முதன்மை கல்வியாக தேர்வு செய்கின்றனர். இதனால்தான் ஜப்பான் இன்றளவும் தொழில் நுட்பத்தில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
எஸ்பிஎம் மாணவர்களிடம் இருந்து TVET கல்வி கற்பதற்கு கிட்டத்தட்ட 2 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இருப்பினும் நாடு முழுவதும் திவெட் கல்வியை வழங்கக் கூடிய 1,345 கல்விக்கழகங்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் நிலை இருக்கிறது.
மனு செய்திருப்பவர்களில் 40 விழுக்காட்டினர் வரும் ஜூலை மாதம் TVET கல்வியை தொடங்குவர் என்று டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். TVET கல்வியில் தங்களது பிள்ளைகள் ஈடுபாடும் ஆர்வமும் கொள்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும் என்றும் அவர் சொன்னார்.
2024 தேசிய TVET தினம்
மலேசியர்கள் மத்தியில் TVET கல்வியின் முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த ஜூன் 7,8 ஆகிய இரு தினங்கள் 2024 தேசிய TVET தினத்தை ஏற்பாடு செய்தது. TVET தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்குகள், தொழிற் கார்னிவல், தொழில்முனைவோர், திவெட் சவால்கள் போன்ற அங்கங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் இனி ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2ஆம் தேதி தேசிய திவெட் தினமாக கொண்டாடப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டதாக தேசிய TVET மன்ற செயலகத்தின் தலைவர் டாக்டர் முகமட் ஃபைசால் தொக்கேரான் கூறினார்.
பந்திங், கோலலங்காட் தொழில் துறை பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த 2 நாள் நிகழ்ச்சியில் 500க்கும் அதிகமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. அதேசமயத்தில் 3,000 வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
தெளிவுபெற்றேன்
‘’தேசிய TVET தினத்தில் கலந்து கொண்டது தமக்கு ஒரு புதிய அனுபவத்தையும் TVET கல்வியின் உன்னதம் பற்றியும் ஒரு தெளிவு கிடைத்தது என்று கோலலங்காட் கம்யூனிட்டி காலேஜ் மாணவி ரிஷித்திரா குமணன் (வயது 19) கூறினார். எனக்கு தொழில்நுட்பத்துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இன்றைய வேலை வாய்ப்புச் சந்தையில் நிறைவான வாய்ப்புகளை தரவல்லதாக இத்துறை விளங்குகிறது. நம்முடைய இளைஞர்கள் திவெட் கல்வியில் நாட்டம் கொண்டு அதனை கற்றுத்தேர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்’’.
பொருத்தமான வேலை வாய்ப்பு
‘’TVET கல்வியை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்கு தேசிய TVET தினம் ஒரு சிறந்த களமாக விளங்கியது என்று லோஜிஸ்டிக் நிர்வாகத்துறையில் டிப்ளோமா கல்வியை மேற்கொண்டிருக்கும் மாணவர் ஜேரெட் பிரவீன் சுவாமி நாதன் (வயது 25) கூறினார்’’.