முகமது ஆரிஃப்-க்கு மரண தண்டனை உறுதி: பயங்கரவாதியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

24 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது ஆரிஃப்-ன் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பர் 22, 2000 அன்று டெல்லி செங்கோட்டைக்குள் அத்து மீறி நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு நிலைகொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிய வந்தது.

டெல்லி செங்கோட்டை

அவருக்கு எதிரான வழக்கில் 2005 அக்டோபரில் முதலில் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கின் நிறைவாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிப் மற்றும் 3 லஷ்கர் பயங்கரவாதிகளும், ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து செங்கோட்டையைத் தாக்கும் திட்டத்தைத் தீட்டினர். அத்திட்டத்தின்படி செங்கோட்டைக்குள் நுழைந்த அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் தனித்தனி என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃபின் மரண தண்டனையை 2007 செப்டம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தொடர்ந்து 2011-ல் உச்ச நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஆனால் அந்த மரண தண்டனைக்கு எதிராக அவர் மறு ஆய்வு மனு செய்ய, அதுவும் ஆகஸ்ட் 2012-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜனவரி 2014-ல் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

செங்கோட்டை தாக்குதல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தல் என்று 2022-ல் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது . மேலும் குற்றவாளிக்கு சாதகமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் அது கூறியது. அதன்படி நவம்பர் 2022-ல், உச்ச நீதிமன்றம் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து, அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

சளைக்காத முகமது ஆரிஃப் கடைசி வாய்ப்பாக குடியரசுத்தலைவருக்கு கருணை மனு விண்ணப்பித்தார். மே 15 அன்று பெறப்பட்ட கருணை மனு மே 27 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான மே 29 ஜனாதிபதி செயலக உத்தரவை மேற்கோள் காட்டி அதிகாரிகள் தற்போது வெளியுலகுக்கு இந்த தகவலை வழங்கியுள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிகு செங்கோட்டையில் புகுந்து ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு, இந்தியாவின் சகல சட்ட விசாரணைகளும் கைவிரித்த பிறகு, கடைசி வாய்ப்பான கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. சுமார் கால்நூற்றாண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் முகமது ஆரிஃபுக்கான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here