பயிற்சியின்போது 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங்

லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற ஐந்து ராணுவ வீரர்கள் திடீர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இந்தத் தகவலை ராணுவமும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உறுதி செய்துள்ளனர். லடாக்கின் பெரும்பாலான ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில், லடாக் அருகில் உள்ள தவ்லத் பேட் ஓல்டி பகுதியில் வெள்ளத்தின்போது ஆற்றைக் கடப்பதற்கான வழக்கமான ராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வந்தன.

இதற்காக டி-72 வகை ராணுவப் பீரங்கியில் அதிகாலை 1 மணியளவில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவுப்படி, தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கிய மீட்புப் படையினர், பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு சனிக்கிழமை காலை 5 ராணுவ வீரர்களையும் சடலங்களாக மீட்டனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தாங்கொணாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கான அவர்களது பங்களிப்பை ஒருபோதும் மறக்க இயலாது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here