தேசிய நிலையிலான கட்டுரைப் போட்டி: லிவினேஸ்வரி முதல் நிலையில் வெற்றி

டில்லிராணி முத்து

தெலுக் இந்தான், ஜூலை 13-

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தேசிய நிலையிலான கட்டுரைப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப்பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி லிவினேஸ்வரி சிவகுமார் முதல் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமைச் சேர்த்தார்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாள் உலகம் முழுவதும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

 இந்நிலையில் 14ஆவது ஆண்டாக தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் மலேசியாவில் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

இவ்வாண்டு தமிழ் அறவாரியத்தின் தலைமையில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), LLG எனப்படும் மலேசியக் கலாச்சார மேம்பாட்டு மையம், மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JOAS), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு டோங் ஸோங் (DONG ZONG), KLSCAH எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம், மலேசியச் சீனப்பள்ளி ஆசிரியர் சங்கம் என மலேசியாவில் 8 மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்ட சமூகப் பொது இயக்கங்களுடன் இணைந்து.

உலக தாய்மொழி தின நாள் கொண்டாடப்பட்டதாக நடேசப்பிள்ளைத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் கணேசன் தெரிவித்தார்.

தாய் மொழியின் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய கடப்பாடு அமைப்புகளுக்கு உண்டு என்ற பட்சத்தில் அதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு மலேசிய தமிழ் அறவாரியம் ஆண்டுதோறும் இவ்விழாவை ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை முன்னிட்டு தமிழ் அறவாரியம் பல போட்டிகளை ஏற்பாடு செய்வதோடு அதில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை பங்கெடுக்க செய்யும். அதேபோல் இவ்வாண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென 2 மாதங்களுக்கு கட்டுரை எழுதும் போட்டியும், ஓவியம் வரையும் போட்டியும் நடத்தப்பட்டதாகவும் கூறிய  அவர், அதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவில் நடைபெற்றது என தெரிவித்தார்.

தேசிய நிலையிலான அப்போட்டிகளில் மலேசியாவிலிருந்து பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் தம் பள்ளியை பிரதிநிதித்து ஆறாம் ஆண்டு மாணவி லிவினேஸ்வரி சிவகுமார் கட்டுரை எழுதும் போட்டியிலும், ஒன்றாம் ஆண்டு மாணவன் இன்பரசன் முத்து

ஓவியும் வரையும் போட்டியிலும் பங்கேற்றனர்.

இந்நிலையில் தம் பள்ளி மாணவி லிவினேஸ்வரி கட்டுரை எழுதும் போட்டியிலும் முதல் இடத்தை கைப்பற்றி சாதனை படைத்தார் என தலைமையாசிரியர் ரமேஷ் பெருமிதம் கொண்டார்.

அதேபோல் மாணவன் இன்பரசனும் ஓவியம் வரையும் போட்டியில் ஒன்பதாவது நிலையில் வெற்றி பெற்றிருப்பதும் தமக்கு மகிழ்ச்சியே என்று அவர் சொன்னார்.

வெற்றி பெற்ற அவ்விரு மாணவர்களுக்கும், அவர்களை நனிச்சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும்  தலைமையாசிரியர் ரமேஷ் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, தம் பள்ளி மாணவர்கள் மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி கனிகளை குவிக்க தாம் தொடர்ந்து பக்கப்பலமாக இருந்து முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்குவேன் என்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here