மர்மமா இருக்கே! பிரேசிலை அலறவிடும் ஓரோபூச்சே வைரஸ்! அடுத்தடுத்து இருவர் பலி

பிரேசிலா: உலகில் இப்போது புதிது புதிதாக பல்வேறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. இதற்கிடையே பிரேசில் நாட்டில் உலகில் முதன்முறையாக ஓரோபூச்சே வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு பேர் இந்த பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், இது அடுத்த பெருந்தொற்றாக வெடிக்குமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சீனாவில் முதலில் பரவிய கொரோனா உலகெங்கும் ஆட்டிப்படைத்தது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இதில் இருந்து மீண்டு வரவே சில வாரங்கள் வரை ஆனது.

புது வித பாதிப்பு: கொரோனாவுக்கு பிறகு திடீர் திடீரென பல புதிய வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. எங்கு இது எங்கு கொரோனா போல மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்படுகிறது. இதற்கிடையே உலகில் முதன்முறையாக ஓரோபூச்சே (Oropouche) வைரஸ் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஓரோபூச்சே என்பது இதுவரை மர்ம நோயாகவே இருந்து வருகிறது. இவை ஏற்கனவே பாதிக்கப்பட்ட கொசுக்கள் மற்றும் பூச்சிகள் மூலமாகப் பரவுகிறது என்பது மட்டுமே தெரியும்.

பிரேசில் நாட்டில் கடந்த வியாழக்கிழமை 30 வயதான இரண்டு பெண்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்குத் தென்பட்ட அறிகுறிகள் ஓரோபூச்சே வைரஸ் பாதிப்பு போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஓரோபூச்சே வைரஸ் என்றால் என்ன: ஓரோபூச்சே வைரஸ் என்பது Peribunyaviridae குடும்பத்தைச் சேர்ந்த Orthobunyavirus என்ற வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும்.. இந்த வைரஸ் முதன்முதலில் 1955ஆம் ஆண்டில் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே வனப் பாதுகாவலர்கள் ஒருவருக்கே இந்த வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது.

என்ன காரணம்:
ஓரோபூச் என்ற ஆற்றுக்கு அருகே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் இது இந்த பெயரைப் பெற்றது. முன்னதாக கடந்த 2000ஆம் ஆண்டில், பிரேசில், பனாமா மற்றும் பெருவில் ஓரோபூச்சே வைரஸ் திடீரென பரவியது. கொலம்பியா, டிரினிடாட் நாடுகளில் சில விலங்குகளிடமும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில், பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, பனாமா மற்றும் பெரு உள்ளிட்ட அமேசான் நாடுகள் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

அறிகுறிகள் என்ன: பல சமயம் இதை டெங்கு சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் அல்லது மலேரியா என்றே பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க தனி வைரஸ் பாதிப்பு. இந்த வைரஸ் நமது உடலை தாக்க 3 முதல் 10 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். திடீர் காய்ச்சல் (38-40°C), தலைவலி, குளிர், ஆர்த்ரால்ஜியா ஆகியவை முதலில் ஏற்படும். ஒரு வாரத்திற்கு மேலாக இதன் அறிகுறிகள் நீடிக்கும்.

அடுத்த கொரோனாவாக இருக்குமா: இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளும் டெங்கு சிக்குன்குனியா, மலேரியாவைப் போலவே இருக்கலாம். ஃபோட்டோபோபியா, மயக்கம், ரெட்ரோபிட்டல், கண் வலி, குமட்டல், வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அதேநேரம் தற்போதைய தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது கொரோனா அளவுக்கு உலகெங்கும் பரவ வாய்ப்புகள் குறைவு என்றும் இதனால் பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here