கோலப் பிலா:
காயம் ஏற்படும் வரை தன்னை மிரட்டியதாக கூறி துப்புரவு தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட போலியான போலீஸ் புகாரைத் தொடர்ந்து, குறித்த பெண்ணுக்கு கோலப் பிலா மாவட்ட நீதிமன்றம் 1700 ரிங்கிட் அபராதம் விதித்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயதான நூர் மைசாத்துள் கைரியா என்ற பெண், அபராதத்தைச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று நீதிபதி சைஃபுல் சயோத்தி உத்தரவிட்டார்.
மேலும் WhatsApp மூலமாக தனக்கு மிரட்டல் வந்ததாக பொய்யுரைத்த அந்தப்பெண், கத்தியைக் கொண்டு சுயமாக தம்மை காயப்படுத்தி கொண்டதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி கோலப் பிலா போலீஸ் தலைமையகத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்தார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 182யின் கீழ் அம்மாது குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 2000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


















