புதுடெல்லி: 2023 ஆம் ஆண்டில் 2.1 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் தரவுகளை இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் ராகவ் சட்டா, இத்தகைய அதிக எண்ணிக்கையிலான துறவறம் மற்றும் இந்தியக் குடியுரிமையை ஏற்றுக்கொள்பவர்களின் குறைவான எண்ணிக்கை போன்றவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதா?
மேலும், குடியுரிமைத் துறப்பின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு மற்றும் வளமான தொழிலதிபர்களின் இழப்பைத் தடுப்பதற்கும் அரசாங்கம் முயற்சித்ததா?, என்று கேள்வி எழுப்பினார்.
வெளிநாடுகளில் வசிக்கும் வெற்றிகரமான, வளமான மற்றும் செல்வாக்குமிக்க இந்தியர்கள் இந்தியாவுக்கு சொத்தாகத் திகழ்கின்றனர் என்று கீர்த்திவர்தன் தெரிவித்தார். கூடுதல் தகவல்களாக, 2019ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 675,541ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 1,335,878ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, 2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

























