அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும்: ஜெய்சங்கர்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.

மற்ற நாட்டினர் நம்மைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புவதால், மற்றவர்களின் தேர்தல் குறித்து நாமும் கருத்து தெரிவிப்பதில்லை. அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதில் இந்தியாவுக்கு முழு நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், உக்ரேன், இஸ்ரேல் போரைச் சுட்டிக்காட்டி பேசிய ஜெய்சங்கர், இன்று நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய கிழக்கு நாடுகள், உக்ரேன், தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள், கொரோனா தாக்கத்திலிருந்து வெளிவந்த நாடுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம், ஆனால், பலர் அதிலிருந்து இன்னும் வெளிவரவில்லை எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here