செவிலித்தாயாக மாறி சாதுர்யமாகச் செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஆண் பணியாளர்கள் இருவருக்கும், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம், முக்கிய இடத்தில் இருக்கிறது. 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் நீலகிரியில் வாழ்ந்து வருகின்றனர். உயர் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் கிடைக்காமல் மிகவும் பின்தங்கி நிலையிலேயே இன்றளவும் சிரமப்பட்டு வருகின்றனர். பிரசவ காலங்களில் பல நாள்களுக்குப் பழங்குடிப் பெண்களை மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடலூர் தேவாலா அருகில் உள்ள போத்துக்கல் பகுதியைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ராஜுசாவை பிரசவத்திற்காக சேரம்பபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.
பிரசவத்தில் சிக்கல் இருப்பதைக் கண்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை அனுப்பி வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலம் சென்று கொண்டிருந்த வேளையில் ராஜுசாவிற்கு தாங்க முடியாத பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் கோகுல் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோபிநாத் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர். அதில் பெண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார் ராஜுசா. தாய், சேய் இருவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.