நந்தியே கைலாயத்திற்கு காவலாகவும், பூத கணங்களுக்கு தலைவனாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அவரை வழிபடுவதற்கும் சில முறைகள் உள்ளது. நந்தியின் காதில் பலரும் தங்களின் வேண்டுதலை சொல்லி வழிபடும் வழக்கம் உள்ளது. இது சரி தானா என்று தெரியாலேயே பலரும் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சிவன் கோவில்களில், சிவன் சன்னதிக்கு எதிராக அவரது வாகனமான நந்தி பகவானுக்கு சிலை இருக்கும். சிவன் கோவிலில் வழிபட செல்லும் பலரும், சிவனை வழிபட்ட பிறகு நந்தியின் காதுகளில் தன்னுடைய வேண்டுதலை சொல்லி விட்டு வருவது வழக்கம். குறிப்பாக பிரதோஷ வழிபாட்டிற்கு பிறகு இப்படி பலரும் சொல்வதை பார்த்திருக்கிறோம். இப்படி நந்தியின் காதுகளில் நம்முடைய வேண்டுதல்களை, குறைகளை சொல்லி விட்டு வந்தால், அவர் சிவபெருமானை சுமந்து செல்லும் போது நம்முடைய கோரிக்கைகளை சிவ பெருமானின் செவிகளில் சேர்த்து விடுவார் என்றொரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
நந்தியின் காதுகளில் இப்படி குறைகளை சொல்லும் முறை சரியான வழிபாட்டு முறை தானா? நந்தியின் காதுகளில் நம்முடைய வேண்டுதலை சொல்லாமா? கூடாதா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. இதற்கான சரியான முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நந்தியின் காதுகளில் நம்முடைய வேண்டுதல்களை சொல்வதும், நந்தியின் ஒரு காதினை மூடிக் கொண்டு, மற்றொரு காதில் குறைகளை சொல்லுவதும் சரியான முறை அல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து விடும் மூச்சுக் காற்றினால் தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்க வாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. பக்கவாட்டில் நின்றே நம்முடைய வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டு கோளைச் சொல்கிறேன் பேர்வழி என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று.
பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.