தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அதோடு படங்களிலும் நடிக்கிறார்.
சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் தொடர் சில நாட்களுக்கு முன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த படப்பிடிப்பில் சமந்தா மயங்கி விழுந்த சம்பவத்தை பற்றி சக நடிகரான வருண் தவான் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் வருண் தவான் கூறும்போது, “சிட்டாடல் ஹனி பன்னி படப்பிடிப்பில் நானும், சமந்தாவும் தொடர்ந்து இரண்டு மணிநேரம் நடித்துக் கொண்டு இருந்தோம். அப்போது சமந்தா திடீரென மயங்கி விழுந்து விட்டார்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே சமந்தாவுக்காக ஒரு ஆக்சிஜன் டேங்க் வந்தது. அவரது நிலைமையை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. படப்பிடிப்பை ரத்து செய்யும்படி சொன்னேன். உடல்நலம் சரியில்லை என்றால் படப்பிடிப்புக்கு வராமல் ஓய்வு எடுத்து இருக்கலாம். ஆனால் சமந்தா அப்படி செய்யவில்லை. தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
செர்பியாவில் நடந்த படப்பிடிப்பிலும் திடீரென தரையில் மயங்கி விழுந்தார். நான் பதறினேன். கொஞ்ச நேரத்தில் சகஜ நிலைக்கு வந்துவிடுவார் பதற்றம் வேண்டாம் என்று இயக்குனர் சொன்னார். அந்த நிலையிலும் சக்தியை ஒன்று திரட்டி நடித்தார். அவரை பாராட்ட வேண்டும்” என்றார்.