சென்னை,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில், இப்படம் மூலம் தனக்கு ‘மன வேதனை’ ஏற்பட்டுள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் வாகீசன் என்பவர் ‘அமரன்’ படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதாவது, படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்த செல்போன் எண் தன்னுடையது என மாணவர் வாகீசன் தெரிவித்துள்ளார். அந்த எண் நடிகை சாய் பல்லவியின் உண்மையான செல்போன் எண் என நினைத்து பலரும் அந்த எண்ணுக்கு போன் செய்து வாழ்த்து கூற முயன்றுள்ளனர். இதனால் மாணவர் மன வேதனை அடைந்துள்ளார். படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் என்னால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடிவதே இல்லை என்று கூறியுள்ளார். அதனால் மாணவர் வாகீசன், அமரன் படக்குழுவினரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம், நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.