கப்பாளா பத்தாஸ் தொகுதி பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூரா முகமட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த அவதூறு வழக்கில் ஜசெக-வின் மூன்று தலைவர்கள் வெற்றி பெற்றனர்.
இதில் ஜசெக மூத்த தலைவர் டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்கிற்கு 3 லட்சம் ரிங்கிட், தேசியத் தலைவர் லிம் குவான் எங்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட், செபூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரெசா கோக்கிற்கு 2 லட்சம் ரிங்கிட் என மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி குவாய் சியூ சூன் பாஸ் எம்.பி. சித்தி மஸ்தூராவுக்கு உத்தரவிட்டார்.
இம்மூவரும் மலாயா கம்யூனீஸ்டு கட்சி தலைவர் சின் பெங்கின் உறவினர்கள் என்று 2023 ஆம் ஆண்டு கெமாமானில் சித்தி மஸ்தூரா குற்றம்சாட்டினார். அவரின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இவரின் இப்பேச்சு தீய நோக்கம் கொண்டது. அவதூறானது என்ற அடிப்படையில் மூவரும் வழக்குத் தொடுத்தனர்.
நாட்டில் தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்புடன் சம்பந்தப்படுத்தி பேசி அவர் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் வழக்கு மனுவில் அம்மூவரும் சுட்டிக்காட்டி இருந்தனர்.




















