வாயோடு வாய் வைத்து பாம்புக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸ்

போபால்:

மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பாம்புக்கு மூச்சுகாற்றை செலுத்தி சிபிஆர் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை இங்கே காணலாம். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மூச்சு பேச்சு இன்றி கிடந்தால் சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்யப்படும். அவ்வப்போது விலங்குகளுக்கு கூட சிபிஆர் சிகிச்சை கொடுப்பதையும் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றை செலுத்துவதையும் பார்த்து இருக்கிறோம். ஆனால், பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் உண்மைதான்.. இதுபோன்ற ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந் துள்ளது. இந்த செய்தி குறித்த விவரம் வருமாறு:- மத்திய பிரதேசம் நர்மதாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. விஷத்தன்மையற்ற இந்த பாம்பு குடியிருப்பில் இருந்த பைப் ஒன்றிற்குள் நுழைந்தது. இதையடுத்து பாம்பை பைப்பிற்குள் இருந்து வெளியேற்ற குடியிருப்பில் வசித்த மக்கள் எவ்வளவோ போராடினர். ஆனால், பாம்பு வெளியே வரவில்லை.

இதனால் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த தண்ணீரை பைப்பிற்குள் ஊத்தினர். இதனால் சிறிது நேரத்தில் பாம்பு பைப்பிற்குள் இருந்து வெளியே வந்தது. அதன்பிறகு பாம்பை என்ன செய்வது என்று தெரியாத அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு காவலர் அதுல் ஷர்மா என்பவர் அங்கு விரைந்து வந்தார். தனக்கு பாம்புகளை மீட்பது எல்லாம் அத்துப்படி என்று சொல்லிக்கொண்ட அதுல் சர்மா, பாம்பு கிடந்த இடத்திற்கு சென்றார். தொடர்ந்து பாம்பு அப்படியே அசையாமல் கிடந்ததை பார்த்த காவலர் அதுல் சர்மா, பாம்புக்கு மூச்சு இருக்கிறதா என சோதனை செய்தார். அடுத்து அவர் செய்த விஷயம் தான்… அங்கிருந்தவர்களை ஒரு நிமிடம் தலை சுற்ற வைத்தது. ஆம், உடனடியாக பாம்பை கையில் எடுத்து அதன் வாயில் தனது வாயை வைத்து மூச்சை செலுத்த ஆரம்பித்தார்.

பின்னர் நல்ல தண்ணீரை எடுத்து பாம்பு மீது ஊற்றினார். சிறிது நேரத்தில் பாம்பு லேசாக அசைய தொடங்கியது. இதைப்பார்த்த அங்கிருந்த மக்களும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டாலே படை நடுங்கும் என்பார்கள்.. ஆனால் பாம்பின் வாயில் மூச்சை செலுத்தும் இந்த காவலரின் செயலைக் கண்டு மெய் சிலிர்க்க நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து காவலர் அதுல் சர்மா கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட பாம்புகளை தான் காப்பாற்றியிருப்பதாக கூறினார். இதை எங்கிருந்து பழகினீர்கள் என்று கேட்ட போது டிஸ்கவரி சேனலை பார்த்து கற்றுக்கொண்டதாக கூறி அங்கிருந்தவர்களை அதிர வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here