பாரிஸ்:
பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 3) அந்நாட்டு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
இதையடுத்து பிரான்சில் அரசியல் நெருக்கடி மோசமடைந்துள்ளது.
தீவிர வலதுசாரி, இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, பிரதமர் மிஷெல் பார்னியே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தனர். அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 331 பேர் வாக்களித்தனர். எனவே, பிரதமர் பார்னியே தமது மற்றும் தமது அரசாங்கத்தின் பதவி விலகலை அதிபர் இமானுவெல் மெக்ரோனிடம் சமர்ப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை அவர் பதவி விலகலைச் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பார்னியே சிறப்பு அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தின் இறுதி வாக்கெடுப்பு இல்லாமலே வரவுசெலவுத் திட்டத்தை அறிவிக்க முடிவெடுத்ததற்கு தீவிர வலதுசாரி, இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தண்டித்திருப்பதாகக் கருதப்படுகிறது. முன்னதாக அந்த வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
1962ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பிரான்சில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாதிக்கும் என்றும், பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்து, வரவுசெலவுத் திட்டமும் அறிவிக்கப்படாததால், இது உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கும் பிரான்சின் திட்டமும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.