மலேசியாவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு – மெட்மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர்:

நாடு வலுவான நிலநடுக்கங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.

நிலநடுக்கங்களை துல்லியமாக கணிக்க எந்த தொழில்நுட்பமும் இல்லை என்றாலும், மெட்மலேசியா, நாடு முழுவதும் நிறுவப்பட்ட நில அதிர்வு நிலையங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் கண்காணிப்புகள் மூலம், நிலநடுக்கங்களைக் கண்டறிந்து அவற்றின் அளவு, இருப்பிடம் மற்றும் ஆழம் பற்றிய தகவல்களை வழங்க முடியும் என்று, அதன் இயக்குநர் ஜெனரல் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.

இந்நிலையில் இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் சபா மாநிலத்தில் பலவீனமான நிலநடுக்கங்கள் பதிவாகிய பின்னர், மலேசியாவில், குறிப்பாக சபாவில், நிலநடுக்கத்தின் சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து ஹிஷாம் கருத்து தெரிவித்தார்.

முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவானது, இது திங்கள்கிழமை பிற்பகல் 2.56 மணிக்கு ரானாவ் நகரில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள் காலை 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.

தேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் செயல்பாட்டு மையத்துடன் இணைந்து நில அதிர்வு நடவடிக்கைகளை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஹிஷாம் கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று சபாவின் ரானாவ்வில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவு கொண்ட வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது, மாநிலம் முழுவதும் உணரப்பட்ட அந்த நிலநடுக்கத்தில் கினாபாலு மலையில் ஏறிக் கொண்டிருந்த 18 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் அப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here