கோலாலம்பூர்:
பத்தாண்டுகளுக்கு முன்னர் வான்வெளியில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடும் புதிய முயற்சிக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மேலும், அந்தத் தேடுதல் பணிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓஷியன் இன்ஃபினிட்டி’ (Ocean Infinity) என்னும் கடல்துறை ஆய்வு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
MH370 விமானத்தை மீண்டும் தேடுவதற்கான அந்த முயற்சிக்கு மலேசிய அமைச்சரவை கடந்த வாரம் (டிசம்பர் 13) கொள்கை அளவில் ஒப்புதல் அளித்ததாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் குத்தகை தொடர்பான நிபந்தனைகள் குறித்து போக்குவரத்து அமைச்சு பேச்சு நடத்தி வருவதாகவும் 2025ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் அது இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“கண்டுபிடிப்பு இல்லை எனில், கட்டணம் இல்லை,” என்னும் கொள்கையின் அடிப்படையில் உத்தேச நிபந்தனை பேசப்படுவதாகவும் தெரிகிறது.
அதாவது, தேடுதல் பணியில் விமானத்தின் சிதைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தேடுதல் நிறுவனத்திற்கு மலேசிய அரசாங்கம் கட்டணம் எதுவும் தராது. எனவே அண்மைய இந்த முயற்சி, MH370 விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு இருக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக லோக் கூறினார்.
2014 மார்ச் 8ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டது. அப்போது 12 விமானப் பணியாளர்களும் 227 பயணிகளும் அந்த போயிங் 777 விமானத்தில் இருந்தனர்.
இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி வானில் பறந்துகொண்டிருந்த வேளையில் அந்த விமானம் திடீரென்று மறைந்துவிட்டது. அதன் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.