அரசுக் கணினிகளில் ‘Deepseek ’ பயன்படுத்தத் தடைவிதித்த ஆஸ்திரேலியா

சிட்னி:

ரசு அமைப்புகளும் நிறுவனங்களும் தங்களது மின்னணுக் கருவிகளில் சீனாவின் ‘Deepseek’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

இதனையடுத்து, அத்தொழில்நுட்பத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ‘Deepseek’ செயலியையும் சேவைகளையும் அரசுக் கணினி அமைப்புகளில் இருந்து உடனடியாக அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘Deepseek’ தொழில்நுட்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம் நிலவுவதாக ஆஸ்திரேலிய வேவு அமைப்புகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தாலியின் தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமும் ‘Deepseek’ செயலிக்குத் தடை விதித்திருந்தது. அதுபோல, அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையமும் கூடுதல் தகவல் அளிக்கும்படி ‘Deepseek’ நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

‘Deepseek’ இன் வரவானது அண்மையில் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கையும் அனைத்துலகச் சந்தைகளையும் ஆட்டங்காணச் செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here