பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; இம்ரான் கான் போட்டியிட வாய்ப்பில்லை

 

இஸ்லாமாபாத், அகஸ்ட்டு 10:

பாகிஸ்தான் நாடாளுமன்றம் தேர்தலை முன்னிட்டு இன்று புதன்கிழமை கலைக்கப்படுகிறது. தேர்தலில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் பொறுப்பிலிருக்கும். ஆனால் நாட்டின் ஆகப் பிரபலமான அரசியல்வாதியான இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று அறியமுடிகிறது.

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் 2022 ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவரது கட்சிக்கு எதிராகப் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்காகச் சுமத்தப்பட்டவை என்றும் கான் கூறியிருக்கிறார்.

சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால், தேர்தல் தாமதமடைய வாய்ப்பிருப்பதாகப் பதவியிலிருந்து வெளியேறும் அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்கிய கூட்டணி அரசாங்கம், அதன் 18 மாதகால ஆட்சியின்போது பொதுமக்களின் ஆதரவை அவ்வளவாகப் பெறவில்லை.

அனைத்துலகப் பண நிதியம் உதவி புரிந்தும் பாகிஸ்தானின் பொருளியல் நிலவரம் மேம்படாதது இதற்கு ஒரு காரணம்.

“இந்தத் தேர்தலில் ஐந்தாண்டுப் பதவிக்காலத்துடன் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் என்பதால் இது முக்கியமான ஒரு தேர்தல். பொருளியல் மீட்சிக்கு அவசியமான தீர்மானங்களை எடுக்க புதிய அரசாங்கம் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்,” என்று பாகிஸ்தானிய சட்டமைப்பு ஆய்வுக் கழகத்தின் தலைவர் அகமட் பிலால் மெஹ்பூப் கூறினார்.

இந்நிலையில், இடைக்கால அரசாங்கம் எதிர்வரும் மாதங்களில் கடும் சவாலை எதிர்நோக்கும் என்று வில்சன் சென்டரின் தெற்காசியக் கழகத்தின் இயக்குநர் மைக்கல் குகல்மன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here