ஜோகூர் பாரு:
ஏழு வயது சிறுவனை கழிப்பறையில் அடைத்து வைத்து, அங்குள்ள தண்ணீரை குடிக்க வைத்து, தினமும் சிறிது ரொட்டி அல்லது சோறை உண்ணக் கொடுத்த குற்றச்ச்சாட்டில், ஜோகூரை சேர்ந்த தம்பதிக்கு RM17,000 அபராதம், சமூக சேவை செய்ய உத்தரவு விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அச்சிறுவன் மீட்கப்பட்டபோது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பலவீனமாக இருந்தான்.
சிறுவனை சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், குறித்த தம்பதியினருக்கு நீதிமன்றம் RM17,000 அபராதம் விதித்ததுடன் அவர்கள் 440 மணிநேர சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டது.
குழந்தையின் தந்தை ஆர். தயாளன், 39, மற்றும் அவரது காதலி கே. மகேஸ்வரி, 41, ஆகியோர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) இங்குள்ள அமர்வு நீதிபதி தல்ஹா பச்சோக் @ எம்போக் மோக் முன்நிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.
குற்றப்பத்திரிகைகளின்படி, குழந்தையின் பராமரிப்பிற்கு பொறுப்பான இருவரும் அச்சிறுவனுக்கு சரியான பராமரிப்பை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஜூலை மற்றும் அக்டோபர் 2023 க்கு இடையில் இங்குள்ள தாமான் பூலாய் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 33(1)(a) இன் கீழ் அலட்சியத்திற்காக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.
























