தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை; சென்னை உச்சநீதிமன்றம் கண்டிப்பு

சென்னை:

பெண் பயணியிடம் இருந்து தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரியை சென்னை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

இலங்கை குடியுரிமை பெற்ற தனுஷிகா என்ற பெண், 2023ல் ஜெயகாந்த் என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்கு பின், கணவர் பிரான்ஸ் சென்றுவிட்டார். தனுஷிகா தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த, இலங்கையில் இருந்து மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், தனுஷிகா அணிந்திருந்த தாலிக்கொடி பெரிதாக இருப்பதாக கூறி, பறிமுதல் செய்தனர். தனக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளதாகவும், இந்த நகை அனைத்தும் தன் சொந்த நகை என்று கூறிய நிலையிலும், அதை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, சுங்கத்துறையினர் தன்னிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகவும் தனுஷிகா புகார் தெரிவித்தார். வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். சுங்கத்துறை தரப்பில், ‘மனுதாரர், வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால், அவர் தங்க நகை அணிந்து கொண்டு வர முடியாது; பையிலும் எடுத்து வர முடியாது. சட்டப்படி தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தாலிக்கொடியை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாலியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல், அதிகாரி அதை பறிமுதல் செய்துள்ளார். தாலி அணிந்திருப்பது, இந்த நாட்டின் கலாசாரம். அதை கழற்றும்படி ஒரு பயணியிடம் கூறுவதும், வலுக்கட்டாயமாக பறிப்பதும், இந்த நாட்டின் கலாசாரத்தையும், ஹிந்து மத நடைமுறைகளையும் நிர்மூலமாக்குவதாக உள்ளது.

எந்த காரணத்துக்காகவும், அதை சகித்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அந்த அதிகாரி, கெட்ட நோக்கத்துடன், மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் இப்படி நடந்திருப்பது போல இருக்கிறது.எனவே, சுங்கத்துறை முதன்மை கமிஷனர் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 11 பவுனில் தாலிக்கொடி அணிந்திருப்பது சகஜமான நடைமுறை தான். எனவே, சோதனை நடத்தும் அதிகாரிகள், மதம் தொடர்பான நடைமுறைகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. சுங்கம் தொடர்பான சட்டம் ஏற்படுத்தும்போது, பயணிகள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பார்லிமென்ட் விலக்கு அளித்துள்ளது என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here